நமக்குப் பிடித்த வீட்டை வாங்கி விடுவோம் எனப் பலரும் வீடு வாங்குவதில் சமீப காலத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி முதல் ஜூன் வரையான இந்தாண்டின் அரையாண்டில், இந்தியாவின் முக்கிய எட்டு நகரங்களில் வீடுகளின் விற்பனை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆன்லைன் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ப்ரோப்டைஜெர் (PropTiger) நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
இது குறித்து ப்ரோப்டைஜெர் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில்,
*இந்தியாவின் முக்கிய எட்டு நகரங்களில் வீடுகளின் விற்பனை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் வீடுகளுக்கான தேவை மந்தமாக இருந்த போதிலும், வீடு விற்பனை வளர்ச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
*2023-ம் ஆண்டின் முதல் பாதியில் வீடு விற்பனைகளின் எண்ணிக்கை 1,44,950 வீடுகளில் இருந்து 1,66,090 ஆக அதிகரித்துள்ளது.
*டெல்லி: டெல்லி தலைநகரைச் சுற்றியுள்ள இடங்களில் வீடு விற்பனை குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 9,530 வீடுகள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 7040 வீடுகளே விற்பனையாகி உள்ளது.
*பெங்களூரு: 16,020 வீடுகளில் இருந்து 14,210 வீடுகளாக விற்பனையாகி 11 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.
*கொல்கத்தா: 6,080 வீடுகளில் இருந்து 4,170 வீடுகளாக விற்பனையாகி 31 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.
*அகமதாபாத்: வீடுகளின் விற்பனை 23 சதவிகிதம் அதிகரித்து 12,790 வீடுகளில் இருந்து 15,710 வீடுகளாக உள்ளது.
*சென்னை: சென்னையில் வீடுகளின் விற்பனை 2 சதவிகிதம் அதிகரித்து 6,520 வீடுகளில் இருந்து 6,680 வீடுகளாக விற்பனையாகி உள்ளது.
*ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வீடுகளின் விற்பனை 24 சதவிகிதம் அதிகரித்து 14,460 வீடுகளில் இருந்து 17,890- ஆக உயர்ந்துள்ளது.
*மும்பை: மும்பையில் வீட்டுத் தேவை 49,510 வீடுகளில் இருந்து 62,630 ஆக அதிகரித்துள்ளது.
*புனே: புனேயில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30,030 வீடுகளாக இருந்த குடியிருப்புகளின் விற்பனை இந்த ஆண்டு ஜனவரி – ஜூன் காலத்தில் 37,760 ஆக உயர்ந்துள்ளது.