மோடியை பிரதமராக்க களமிறங்கும் அமெரிக்க நிறுவனம்: ஆகஸ்ட் முதல் பெரிய மாற்றம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் அதை முன்வைத்தே காய் நகர்த்தி வருகிறது. பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன.

இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்த பாஜக மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கூட்டம் நடத்தினாலும் அடுத்தடுத்த கட்டத்தை எட்டும் போதுதான் கூட்டணி எவ்வளவு வலுவாக இருக்கிறது, எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து தெரிய வரும்.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு காரணிகள் உதவியாக இருந்தாலும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பிரச்சாரத்தை முன்னெடுத்தது அந்நிறுவனம். தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே நரேந்திர மோடியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலையை கச்சிதமாக பார்த்தது.

மோடி மீது அதற்கு முன்னர் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் ஐ பேக் நிறுவனத்தின் பிரச்சாரத்தால் விமர்சனங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு நேர்மறையான அம்சங்கள் மட்டும் முன்னிறுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி மீது இருந்த அதிருப்தியும் சேர்ந்து மோடியை பிரதமர் நாற்காலியில் அமரவைத்தது.

2014இல் பாஜக ஆட்சியமைக்க ஐ பேக் காரணமாக இருந்ததால் அந்நிறுவனத்திற்கான வரவேற்பு அதிகமானது. இந்தியா முழுவதும் முக்கிய கட்சிகள் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் இணைத்துக் கொண்டன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, பீகாரில் நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வெற்றி பெற்றனர்.

பாஜகவுக்கு எதிராக நிற்கும் கட்சிகளுடன் ஐ பேக் பணியாற்றி வந்த நிலையில 2024 தேர்தலில் பாஜக எவ்வாறு தேர்தல் வியூக பணிகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிக்கையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றதற்கு பின்னிருந்து பணியாற்றிய நிறுவனத்துடன் தான் பாஜக ஒப்பந்தம் செய்துள்ளதாம். ஆகஸ்ட் மாதம் முதல் நேரடியாக களத்தில் இறங்கி தேர்தல் பணிகளில் இந்நிறுவனம் வேகம் காட்ட உள்ளதாம் . அதன்பின்னர் மீண்டும் மோடி அலை நாடு முழுவதும் அடிக்கும் என்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.