விளம்பர படம் : ராஜமவுலிக்கு 30 கோடி சம்பளம்?
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கிய தெலுங்கு படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. 'பாகுபலி' படங்களின் மூலம் பான் இந்தியா டிரெண்ட்டை உருவாக்கினார். 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் ஆஸ்கரின் கதவை தட்டினார். அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்க இருக்கிறார். 3 பாகமாக வெளிவர இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி என்கிறார்கள்.
இந்த நிலையில் ராஜமவுலி ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்த செய்தி அண்மையில் வெளியாகி ஆச்சர்யத்தை உண்டாக்கியது. இந்த விளம்பர படத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு அந்த நிறுவனம் 30 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விளம்பர படத்தில் நடிக்க மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக ஓர் ஆண்டுகள் பணியாற்றவும் சேர்த்து இந்த சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இதுதவிர அந்த செல்போன் நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றையும் ராஜமவுலி இயக்கித் தர வேண்டும் என்பதும் இந்த சம்பளத்தில் அடங்கும் என்கிறார்கள்.
ராஜமவுலி 'ஆர்ஆர்ஆர்' படம் இயக்க ரூ.100 கோடி சம்பளம் பெற்றார் என்றும், அடுத்து இயக்க இருக்கும் மகேஷ் பாபு படத்திற்கு ரூ.300 கோடி சம்பளம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.