விவசாய திட்டத்தில் உள்ளடக்கப்படாத பயிர்களுக்கு இலவச காப்பீடு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை

2023 வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்ட விவசாய திட்டத்தில் உள்ளடக்கப்படாத பயிர்களுக்கு இலவச காப்பீடு வழங்குவது தொடர்பில் இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. 2024 வரவு செலவு திட்டத்திலும் இதேவிடயம் தொடர்பில் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இரண்டரை ஏக்கருக்கு 40,000 ரூபாய் என விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று (5) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ஸ் நிர்மலநாதன் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சோளம், மிளகாய், வெங்காயம், உருளைக் கிழங்கு மற்றும் நெல் முதலிய பயிர்களுக்கு அனர்த்த மற்றும் இலவச காப்பீடுகள் வழங்கப்படுவதைப் போல உழுந்து மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களுக்கும் அரசாங்கம் இலவசமாக காப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும், நெல் விதைக்கும் நிலங்களில் மேட்டுநில விவசாயம் செய்பவர்களுக்கு, நெல் விதைப்பவர்களுக்கு வவுச்சர் மூலம் வழங்கும் பசளை வழங்கப்படுவது இல்லை, மேட்டுநில விவசாயம் செய்பவர்களுக்கும் பசளைக்கான வவுச்சர்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு விவசாய அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்,

இருப்பினும் நிலக்கடலை, உழுந்து போன்ற பயிர்களுக்கு விவசாயிகளின் பங்களிப்பு காப்பீடு நடைமுறையில் இருப்பதால் அந்த காப்பீடு திட்டங்களிற்கு தவணை கட்டணங்களை செலுத்துவதன் மூலம் பங்களிக்கலாம். இக் காப்பீடு கட்டணம் நிலக்கடலைக்கு 3500 ரூபாவும், உழுந்து 2100 ரூபாவும் என தமது பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்கும் முன்னமே விவசாயிகள் செலுத்த வேண்டும். இதிலிருந்து இயற்கை சீற்றங்கள், பூச்சி தாக்கங்கள் மற்றும் காட்டு யானைத் தாக்கம் என்பவற்றுக்கு இதன் மூலம் காப்பீடு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் தற்போது பயிர்செய்கையில் பாதிக்கப்படுபவர்களுக்கு மில்லியன் கணக்கில் நிவாரணங்களை வழங்குகிறோம், இவற்றை வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலும் சேர்த்துள்ளோம் அரசின் நிதித் திட்டங்களின் படி எவ்வித நிதி கட்டணங்களும் அறவிடாமல் நிவாரணத் தொகையினை வழங்க தீர்மானித்துள்ளோம். இருப்பினும் ஒரு சிறிய தொகைப் பணத்தை செலுத்தி நிவாரண உதவியை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் இதனை வழங்க விவசாய காப்பீட்டு நிறுவனம் தயார் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இதேவேளை நெல் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 20000 என நிவாரணம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேட்டுநில விவசாயிகள் தொடர்பில் அடுத்த போகத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இம்முறை நெற் பயிர்ச் செய்கையாளர்களுக்கு 20 மில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுநில பயிர்ச் செய்கையாளர்களுக்கான பசளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி அமைச்சரவையின் அனுமதியினைப் பெற்று குறிப்பிட்ட வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.