`குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றிய ராமகிருஷ்ணன்.
தற்போது மாமன்னன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மாமன்னன் படம் குறித்து அவர் பகிர்ந்து கொள்ளும் நினைவலைகள் இதோ….
மாமன்னன் திரைப்பட வாய்ப்பு எப்படி வந்தது?
இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அதுவாக வரவில்லை. நானே தான் சென்று இயக்குநர் மாரி செல்வராஜிடம் கேட்டேன். ஆன ‘இதில் உதய் சார் தான் லீட் ரோல் பன்றாரு. வேற கேரக்டர் எதுவும் இல்ல’ னு சொல்லிட்டார். ஒரு ஷாட்டா இருந்தாலும் பரவாயில்ல. நான் இந்த படத்துல நடிக்கிறேனு சொன்னேன். அதுக்கப்புறம் ஒரு மேஜிக் நடந்த மாரி திடீர்னு ஒரு கேரக்டருக்கு கூப்பிட்டாரு. உடனே நடிக்க போயிட்டேன். அப்படி வந்தது தான் மாமன்னன் திரை வாய்ப்பு.
மாமன்னன் அனுபவம் எப்படி இருந்தது?
வடிவேல் சார் கூட சேந்து வேலை பார்ப்பேனு நான் கனவுல கூட நினைச்சு பாத்ததில்ல. தேவர் மகனுக்கு அப்றம் இத்தன வருசம் கழிச்சு இப்ப தான் இந்த மாதிரியான ரோல் அவருக்கு அமையுது. நான் கொஞ்ச நாள் அசிஸ்டென்ட் டைரக்டராவும் வேல செஞ்சேன். அப்போ பகத் சார் நடிக்கும் போது, அவரு பக்கத்துல இருந்து பாக்க வாய்ப்பு கிடைச்சுது. கீர்த்தி சுரேஷும் பெரிய நடிகை. ஒரு பெரிய விசயத்தை சாதாரணமா செஞ்சிட்டு போயிடுவாங்க.
ஒரு இயக்குநரா மாரி செல்வராஜ் மீது வைக்கப்படுகிற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அதை ஒரு தனி மனிதத் தாக்குதலா தான் நான் பாக்குறேன். அவங்க முன் வச்ச குற்றச்சாட்டு படத்துல எதாச்சு ஒரு இடத்துல இருக்கா? இது எல்லாமே கவனத்த ஈர்க்க தான் பண்றாங்க. உலகம் முழுக்க சுயமரியாதை எங்கெல்லாம் மறுக்கப்படுதோ, அதுக்கெல்லாம் சேத்து தான் இவரு பேசிருக்காரு. அதுக்கு நீங்க பெரியாரிஸ்டா இருக்கணும், அம்பேத்கரிஸ்டா இருக்கணும்னு அவசியமில்லை. எல்லாரும் இதை ஒரு சாராருக்கான படமா நினைக்கிறாங்க. அப்படி ஒரு சாராருக்கான படமா இருந்தா நிச்சயமா இது வெற்றி பெற்றிருக்க முடியாது.
அசிஸ்டெண்ட் டைரக்டர்களை அடிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு ஒன்று எழுகிறதே…
இதெல்லாம் காழ்ப்புணர்ச்சில பேசுறாங்க. அப்படி அவர் இருந்துருந்தா, படம் வெற்றியானோனே, எங்கயாச்சு பேமிலிய கூட்டிட்டு ட்ரிப் போயிருக்கலாம். ஆனா, அவரு அசிஸ்டென்ட் டைரக்டர்களை எல்லாம் கூப்பிட்டு பார்ட்டி வச்சாரு. நைட் ஒரு மணிக்கு பக்கெட் பிரியாணி வாங்கி பரிமாற வேண்டிய அவசியம் என்ன? ஸ்பாட் லயே அவரு டீல் பண்ற விதமெல்லாம் அவ்ளோ கண்டிப்பாக இருக்காது. அதை நான் ஒரு தகப்பன் பையன் மீது வைக்குற கண்டிப்பா தான் நான் பாக்குறேன்.
மாமன்னன் கதை முன்னாள் சபாநாயகர் தனபாலோட கதைனு சொல்றாங்களே?
இது எல்லாமே எனக்கு செவிவழிச் செய்தி தான். எந்தளவுக்கு உண்மைனு தெரில. அப்படி உண்மையாக இருந்தால் போற்றுதலுக்குரியது தான். ஒருத்தர் முன்னாடி உட்கார கூடாதுன்னு புறக்கணிக்கப்படும் ஒருவர், முன்னாடி எல்லாரும் நிக்கிறது தான் இதுல கதை.