சென்னை: திரையரங்குகளுக்குப் பிறகு சினிமா ரசிகர்களின் விருப்பமான ஒன்றாக ஓடிடி தளங்கள் மாறிவிட்டன.
திரையரங்குகளில் குடும்பத்துடன் பார்க்கத் தவறிய படங்களை ஓடிடி தளங்களில் பார்த்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் இருந்தும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன.
அதன்படி இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்:ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. மே மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஃபர்ஹானா படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. பல எதிர்ப்புகளை கடந்து வெளியான ஃபர்ஹானா, பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் வரும் 7ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது.
ஆர்யா நடித்துள்ள காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகிறது. முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் 3ம் தேதி வெளியான காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் இந்த வாரம் ஜீ 5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பு கிடைக்காத இந்தப் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
சித்தார்த் நடித்த டக்கர் திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. சித்தார்த்துடன் திவ்யான்ஷா கெளசிக், விக்னேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியிருந்தார். ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான டக்கர் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
அதேபோல் அமேசான் பிரைமின் ஒரிஜினல் சீரியஸான ‘ஸ்வீட் காரம் காஃபி’ இந்த வாரம் வெளியாகிறது. லக்ஷ்மி, மதுபாலா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த சீரிஸ்ஸை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, ஸ்வாதி ரகுராம் ஆகியோர் இயக்கியுள்ளனர். பேமிலி சென்டிமென்டல் ஜானரில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் அமேசான் ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பில் உள்ளது.
தமிழ் தவிர இந்தியில் பிளைன்ட் திரைப்படம் ஜியோ சினிமாவிலும், தார்லா திரைப்படம் ஜீ 5 தளத்திலும் வெளியாகிறது. அதேபோல், ஆங்கிலத்தில் 65 மூவிஸ், தி அவுட் லாஸ், கோல்ட் பிரிக் ஆகிய திரைப்படங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதுதவிர மேலும் பட படங்கள், வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்ற்ன. அதேநேரம் திரையரங்குகளில் இந்த வாரம் எந்த படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.