ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் குமாரின் நிராகரிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஏற்கனவே மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நீதிபதி கேட்டிருந்தார். அது தொடர்பாக ஆவணங்களை சமர்பிக்க தயாராக இருப்பதாக ரவீந்திரநாத் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, தன் தரப்பு விளக்கத்தை கேட்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், ரவீந்திரநாத்குமார் கடந்த வாரம் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் தெரிவித்த கேள்விகளுக்கு, சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார் ரவீந்திரநாத். பின்னர் மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் வி. அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார்.அதிகார துஷ்பிரயோகம், ஆவணங்களில் திருத்தம், சொத்துகள் முறையாக காட்டாதது, பணப்பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை மறுத்து மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக நின்றபடியே விளக்கம் அளித்தார் ஓபி ரவீந்திரநாத்.

இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இன்று பிற்பகல் தீர்ப்பளித்தார். அதன்படி ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சுந்தர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்க ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ரவீந்திராநாத் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி சுந்தர், 30 நாட்கள் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.