தி.மு.க-வின் சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் தேர்வும் நியமனமும் தொடங்கி, கிட்டத்தட்ட ஓராண்டாகியும் இன்னும் நிறைவடையவில்லை. அதிருப்தியில் இருக்கும் கட்சிக்காரர்களுக்கு சார்பு அணிகளில் பொறுப்பு கொடுத்து, மக்களவைத் தேர்தலில் சுறுசுறுப்பாக வேலை பார்க்கவைக்கவே இந்த நியமன முடிவை கையிலெடுத்தது தலைமை. ஆனால், ‘இதோ பதவி தருகிறோம்… அதோ தருகிறோம்…’ என்று இழுத்தடித்தே அவர்களைச் சோர்வாக்கிவிட்டதாம் கட்சி. இது குறித்து அறிவாலயத்தில் விசாரித்தால், ‘இளைஞரணிக்கான நிர்வாகிகள் பட்டியல் முதலில் வெளியாகட்டும் எனக் காத்திருக்கிறோம்’ என்கிறார்களாம்.
அன்பகத்தில் விசாரித்தால், “இளைஞரணிச் செயலாளரே நேரடியாக நிர்வாகிகள் தேர்வில் ஆர்வம் காட்டினார். இடையில் அவருக்கு வேறு வேலை நெருக்கடி வந்துவிட்டதுதான் பட்டியல் தாமதமாவதற்குக் காரணம்” என்கிறார்களாம். “சினிமா ஷூட்டிங் மற்றும் விழாக்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் பாதியை அவர் கட்சிக்கும் ஒதுக்கியிருந்தால், நிர்வாகிகள் நியமனம் எப்போதோ முடிந்திருக்கும்” எனப் புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள். இப்போது இளைஞரணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். இனியாவது சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் நடக்குமா என்று காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்!
ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கும் அண்ணாமலை, அதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கப் பயணத்துக்குத் திட்டமிட்டிருக்கிறார். ‘லண்டனைப்போலவே, தென்னாப்பிரிக்காவிலும் தமிழர்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு திரட்டப்போகிறேன்’ என்று வெளியே ஒரு காரணம் சொன்னாலும், உள்விவகாரமே வேறு என்கிறார்கள். `மக்களவைத் தேர்தலையொட்டி, தொழிலதிபர்களைச் சந்திக்கவே இந்த வெளிநாட்டுப் பயணம்’ என்கிறார்கள் அவர்கள். கூடவே சர்ச்சைக்குரிய நிறுவனத்தின் ஆடிட்டரையும் அவர் அழைத்துச் செல்வதாகத் தகவல்.
இது தெரியாமல், “உள்ளூரிலேயே இன்னும் ஆதரவு திரட்டத் தொடங்கவில்லை… அதற்குள் வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஆதரவு திரட்டப்போகிறாரா அண்ணாமலை?” என்று கமலாலயத்திலேயே சிலர் கமென்ட் அடிக்கிறார்களாம்.
மோடி அரசின் ஒன்பது ஆண்டுக்காலச் சாதனைகளை விளக்கிப் பேசுவதற்காக, அண்மையில் மத்திய அமைச்சர் ஒருவர் இரண்டு நாள் பயணமாக மலை மாவட்டத்துக்குச் சென்றிருக்கிறார். கூட்டத்தை முடித்துவிட்டு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவரைச் சந்திக்க, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் இரவோடு இரவாக மலையேறியிருக்கிறார்கள். கட்சிக்குள் நடக்கும் உள்ளடி, மாஜி காக்கி நிர்வாகியின் மிரட்டல் அடவாடி, கூட்டணிக் குடைச்சல் என ஒன்றுவிடாமல் அவரிடம் புலம்பித் தீர்த்தார்களாம் அவர்கள். லேட் நைட் வரை சென்ற இந்த மீட்டிங் முடிந்ததும், “ஏற்கெனவே பல்வேறு புகார்கள் இருக்கின்றன. நீங்கள் சொன்னவற்றையும் மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நல்லது நடக்கும்… சிலரது ஆட்டமும் அடங்கும்” என ஆரூடம் சொல்லி வழியனுப்பி வைத்தாராம் மத்திய அமைச்சர்.
உப்பு மாவட்டத்தில் அமைச்சர் அக்காவுக்கும், மேயர் தம்பிக்கும் அதிகார மோதல் நாளுக்குநாள் முற்றிக்கொண்டே செல்கிறது. தலைமையிலிருந்து வந்த ‘பெரிய அக்கா’, சமரசம் செய்துவைத்தும் அவர்களது பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. முதல்நாள் மாநகராட்சிப் பகுதியில் தம்பி ஆய்வு மேற்கொண்டால், மறுநாளே அதே இடத்தில் அக்கா ஆய்வு மேற்கொள்கிறாராம். மாநகராட்சிப் பகுதியிலுள்ள தனியார் காய்கறிச் சந்தையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என தம்பி அறிவிக்க, அடுத்த நாளே அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அக்கா அமைச்சரோ, “இனிமேல் பழைய மாதிரியே வாகனங்களை நிறுத்தலாம்” என அறிவித்துவிட்டு வந்துவிட்டார். ‘அவன் என்ன சொல்றது… என் கட்டளையே சாசனம்!’ என்று அக்கா சொல்லுமளவுக்கு இருவருக்குமிடையே ஈகோ வளர்ந்திருக்கிறது. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல, யார் பேச்சைக் கேட்பது எனத் தெரியாமல் இரண்டு பக்கமும் இடி வாங்கிக்கொண்டிருக்கிறார்களாம் அதிகாரிகள்.
தொடர்ந்து சர்சைக்குள்ளாகும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், பண மோசடிப் புகாரில் குற்றம்சாட்டப்பட்டவருடன் நட்பு பாராட்டியதாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ‘சம்பந்தப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயரைச் சொல்லி, அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பலரிடம் பண மோசடி செய்துவிட்டார்’ என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் புகார்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.
விசாரணையில், அந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி மட்டுமன்றி, மேலும் சில ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் அந்தத் தொழிலதிபர் புரோக்கராகச் செயல்பட்டது தெரியவந்ததாம். அந்தத் தொழிலதிபரிடம் எந்தெந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்பில் இருக்கிறார்கள், அதன் மூலம் அவர்கள் பெற்ற பலன் என்ன என்று மேலிடத்துக்கு ரிப்போர்ட் போட்டிருக்கிறதாம் உளவுத்துறை!