திமுக சட்டத்துறை அமைச்சர் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

திமுக சட்டத்துறை அமைச்சரான ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு சிபிஐ இசைவு ஆணை கோரியதாக தெரிவித்திருந்தார்.

மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது என்றும் தனது கடிதத்தில் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதேப்போன்று, கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது என்றும் இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன என்றும் முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை கவர்னர் வழங்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதில் முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர் மற்றும் பிவி ரமணா மீதான வழக்குகளை சிபிஐ விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம் ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் பற்றி மாநிர அரசிடம் இருந்து எந்த குறிப்பும் கோரிக்கையும் வரவில்லை என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேசி வீரமணி வழக்கில் விசாரணை அறிக்கை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.