சென்னை: நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டுகளில் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பொன்முடி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களைத் தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயவேல் இன்று தீர்ப்பளித்தார். இதன்படி, அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த எந்தவிதமான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை; மேலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.