நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குவது இன்றியமையாதது என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் ‘நீதிமன்றங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ள தாமதம் மற்றும் அது தொடர்பான விடயங்கள்’ தொடர்பாக சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான்கு படிமுறைக் கொள்கையின் ஊடாக இலங்கையில் நீதித்துறை செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, டிஜிட்டல் மயமாக்கல், நீதிபதிகள் நியமனம் மற்றும் சிவில், வர்த்தக மற்றும் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இந்த கொள்கையின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அன்று மேற்கொள்ளப்பட்ட அந்த தீர்மானங்களினால், சில சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அத்துடன், சுமார் 80 புதிய சட்ட திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், ஒரு நாடாக நாம் முன்னோக்கிச் செல்ல ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். அதற்கு நீதித்துறையின் வேகம் அவசியம் சில வழக்குகள் 20 அல்லது 30 ஆண்டுகள் வரை நீடிக்கின்றன.
இந்த புதிய சட்டங்கள் விரைவிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். 2021-2022 காலப்பகுதியில், நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்று அது படிப்படியாகக் குறைந்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.