வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : ‘போலி செய்திகளை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது நல்ல நோக்கமாக இருந்தாலும், அதை சரியாக செயல்படுத்தாவிட்டால் அது சட்டவிரோதமாகிவிடும்’ என, மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சமூக வலைதளங்களில் போலி செய்திகள் வெளியிடப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில், அதன் உண்மைதன்மையை உறுதி செய்யும் அதிகாரம், பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் அமைப்புக்கு அளிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சமீபத்தில் திருத்தம்
செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, ‘எடிட்டர்ஸ் கில்ட்’ எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இந்திய இதழ்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்
பட்டதாவது:சமூக வலைதளங்களில், மத்திய அரசுக்கு எதிராக உள்ள செய்திகளை நீக்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தன் மக்கள் மீது இந்த அரசுக்கு நம்பிக்கையில்லையா? அல்லது தான் நினைப்பது, செய்வதை மட்டுமே ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த நினைக்கின்றனரா?
இவ்வாறு வாதிடப்பட்டது.
இதையடுத்து அமர்வு கூறியுள்ளதாவது: தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில், இணைய வசதி இல்லாமல், சமூக வலைதளங்கள் இல்லாமல் எதுவும் இயங்க முடியாது. எந்த ஒரு நல்ல நோக்கமாக இருந்தாலும், அதை செயல்படுத்தும் விதம் சரியாக இல்லாவிட்டால், அது சட்ட விரோதமாகும்.இந்த சட்ட திருத்தங்கள் தற்போதை நிலையில் ஏன் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் மத்திய அரசு ஏன் மவுனமாக உள்ளது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement