போபால்மத்திய பிரதேசத்தில், பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர், சமீபத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது, சிகரெட் புகைத்தபடி சிறுநீர் கழித்தார்.
இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘பர்வேஷ் சுக்லாவை கைது செய்ய வேண்டும்’ என, பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் மாநில அரசியலிலும் புயலைக் கிளப்பியது.
இது குறித்து, காங்., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் கூறுகையில், ”நாகரிக சமுதாயத்தில் இது போன்ற கொடூரமான செயலுக்கு இடமில்லை. ம.பி.,யில், பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்கு வர வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார்.
இதன்படி வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பர்வேஷ் சுக்லாவை, நேற்று நள்ளிரவு 2:00 மணி அளவில் கைது செய்தனர்.
இது தொடர்பாக, அவரது மனைவி மற்றும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, எஸ்.சி., – எஸ்.டி., சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரவேஷ் சுக்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத் தியதை அடுத்து, சித்தி மாவட்டத்தில் பர்வேஷ் சுக்லாவுக்கு சொந்தமான வீட்டை, மாவட்ட நிர்வாகம் நேற்று இடித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்