மகளிர் உரிமைத் தொகை நிபந்தனைகளை நீக்குங்கள்: டிடிவி தினகரன் கோரிக்கை!

தமிழக அரசு நேற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன் படி தகுதி வாய்ந்த ஒரு கோடி பேரை கண்டறிந்து உரிமைத் தொகை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு அறிவித்த தகுதி வாய்ந்தோருக்கான நிபந்தனைகளால் பெரும்பாலானோர் பயன்பெற முடியாது என எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இதே கருத்தை கூறிவரும் நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது தகுதிப்படைத்த மகளிர் யார் என்ற அறிவிப்பை முதலமைச்சர் திரு.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.

நியாயவிலை கடைகளில் முகாம் அமைக்கப்படும், அங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும், ஆதார் அட்டை,ரேஷன் அட்டை இல்லாத தகுதிவாய்ந்த மகளிரை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டிருப்பது இந்தத் திட்டத்தை ஆளும்கட்சியினரின் தலையீடு இல்லாமல் முறையாக செயல்படுத்த முடியுமா? என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க ஆட்சி மீது எழுந்த அதிருப்தியை சரி செய்யவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இந்தத் திட்டத்தை அவசரகதியில் திமுக செயல்படுத்தத் துடிப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.

அறிவிப்பது ஒன்றும், செயல்படுத்துவது வேறாகவும் இருப்பதே திமுக அரசின் பாரம்பரிய நடைமுறை என்பது இந்த விஷயத்திலும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆகவே வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.