சென்னை: புது புது அர்த்தங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சித்தாரா.
90களில் வெளியான திரைப்படங்களில் ஹீரோக்களின் பெஸ்டியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், 50 வயதாகியும் நடிகை சித்தாரா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதன் காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
நடிகை சித்தாரா ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை
கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் பெஸ்டியாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தவர் நித்யா மேனன். இதேபோல் 90களில் பல படங்களில் பெஸ்டியாக நடித்து பிரபலமானவர் சித்தாரா. கே பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தில் ஜோதியாக நடித்து ரசிகர்கள் மனதில் ஜொலித்தார்.
இந்தப் படம் கொடுத்த சிறப்பான வரவேற்பால், அடுத்தடுத்து உன்னை சொல்லி குற்றமில்லை, புது புது ராகங்கள், புது வசந்தம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இதில் விக்ரமன் இயக்கிய புது வசந்தம் படத்திலும் பெஸ்டியாக நடித்து ஸ்கோர் செய்திருந்தார். இதேபோல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் பல படங்களில் நாயகியாக நடித்த சித்தாரா, ஒரு கட்டத்தில் ஹீரோக்களின் தங்கையாக நடிக்கத் தொடங்கினார்.
நட்புக்காக, படையப்பா போன்ற படங்கள் சித்தாராவுக்கு தங்கை நடிகை என்ற அடையாளத்தை கொடுத்தது. அதேபோல், இன்னொரு பக்கம் சின்ன திரையிலும் சீரியல்களில் நடித்து பிஸியானார். தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சித்தாரா, இதுவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. 50 வயதாகிவிட்ட போதிலும் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தனியாக வாழ்ந்துவருகிறார்.
இதற்கு காரணம் சித்தாரா முன்னணி நடிகையாக இருந்த போது பிரபல நடிகரை காதலித்து ஏமாந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. காதல் தோல்வியால் தான் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது உண்மையில்லை என்றும் அவரது தந்தை இறந்தபின்னர் தான் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தனியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சித்தாரா நடிப்பில் இறுதியாக விஷாலின் பூஜை, முன்னோடி, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பின்னர் தமிழில் வாய்ப்பில்லை என்றாலும் இப்போதும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார் சித்தாரா. புது புது அர்த்தங்கள் ஜோதி, புது வசந்தம் கெளரி, படையப்பாவில் ரஜினியின் தங்கை என இந்த கேரக்டர்கள் ரசிகர்களுக்கு ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது.