புதுடெல்லி: வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளுக்கான கட்டணத்தை 25 சதவீதம் குறைப்பதாக மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கடந்த 30 நாட்களில், எந்தெந்த ரயில்களில் ஏசி இருக்கை வகுப்புகளில் (AC chair Car) மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளில் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததோ, அந்த ரயில்களுக்கு இந்தச்சலுகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்களில் ஏசி இருக்கை வகுப்பு என்று ஒரு பிரிவுஉள்ளது. சில குறிப்பிட்ட வழித்தடங்களில், ஏசி இருக்கை வகுப்புகளை மக்கள் பயன்படுத்துவது குறைவாக உள்ளது. இந்நிலையில், அப்பெட்டிகளில் பயணிகளின் எண்ணிக் கையை அதிகரிக்கும் நோக்கில் கட்ட ணத்தை 25 சதவீதம் வரையில் குறைக்க ரயில்வே துறை முடிவுசெய்துள்ளது. இந்தச் சலுகைதிட்டம் வந்தே பாரத் ரயில்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் ஏசி பெட்டிகளைக் கொண்டிருக்கும் வந்தேபாரத் மற்ற ரயில்களை விட வேகமாக செல்லக்கூடியது. மற்ற ரயில்களைவிடவும் வந்தே பாரத்தில் கட்டணம் அதிகம். இதனால், சில வழித்தடங்களில் 21 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையில் மட்டுமே மக்கள் வந்தே பாரத் ரயிலைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அத்தகைய வழித்தடங்களில் செல்லும் வந்தே பாரத் ரயில்களின் கட்டணமும் 25 சதவீதம் உடனடியாக குறைக்கப்படுகிறது.
இது குறித்து ரயில்வே வாரியம்வெளியிட்ட குறிப்பில், “ஏசிஇருக்கை பெட்டிகள், எக்ஸிகியூட்டிவ் வகுப்புகள் உள்ள அனைத்து ரயில்களுக்கும் சலுகைக் கட்டண அறிவிப்பு பொருந்தும். கடந்த 30 நாட்களில் ஏசி இருக்கை மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் பயணித்த ரயில்களுக்கு இந்தச் சலுகைக் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும். டிக்கெட்டின் அடிப்படைக் கட்டணத்தில் 25 சதவீதம் வரையில் சலுகை வழங்கப்படும். டிக்கெட்டை பதிவு செய்வதற்கான கட்டணம், ஜிஎஸ்டிஉள்ளிட்டவை இந்தச் சலுகையில் சேர்க்கப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மண்டலங்கள், தங்கள்எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ரயில்களில் ஏசி இருக்கை மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளில் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர் என்பதை கணக்கிட்டு, அந்த வழித்தடங்களில் சலுகைக் கட்டணத்தை அறிமுகப்படுத்தும். ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், தற்சமயம் தங்களது கட்டணத்தில் சலுகை கோர முடியாது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் சிறப்பு ரயில்களுக்கு இந்தச் சலுகை திட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.