சிறுமியை துன்புறுத்திய நபருக்கு 10 ஆண்டு சிறை
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, 7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, போக்சோ கோர்ட் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அரியாத்துாரைச் சேர்ந்தவர் வேலு, 45; கூலி தொழிலாளி. இவர், 2018ல், 7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். கீழ்கொடுங்காலுார் போலீசார், அவரை போக்சோவில் கைது செய்தனர்.
வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை நீதிபதி பார்த்தசாரதி, கூலித்தொழிலாளி வேலுவிற்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மிளகாய் பொடி துாவி விவசாயி வெட்டிக்கொலை
ஓசூர்: விவசாயி கண்ணில் மிளகாய் பொடி துாவி, அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சிவராமன், 50; விவசாயி. மாடு வளர்த்து வருகிறார். ஜூஜூவாடி, திருவள்ளுவர் நகர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான மானிய நிலத்தை குத்தகை எடுத்து, அதில் தீவன புற்களை வளர்த்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் பால் விற்பனை முடித்து, மாடுகளுக்கு தீவன புல் அறுத்து, ஆம்னி வேனில் வீட்டிற்கு எடுத்து வந்தார்.
சுடுகாடு செல்லும் சாலையில் வந்த போது காலை, 9:00 மணிக்கு, ‘யமஹா ஆர்.எக்ஸ்.,’ பைக்கில், ‘மங்கி’ குல்லா அணிந்து பின் தொடர்ந்து வந்த இருவர், ஆம்னி வேனை மறித்து, சிவராமன் முகத்தில் மிளகாய் பொடி துாவினர்.
நிலைகுலைந்த அவரை சாலையில் இழுத்து போட்டு, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
ஓசூர் போலீசார் விசாரித்தனர். கொலை நடந்த இடத்திற்கு அருகே கிடைத்த கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடக்கிறது. சிவராமனுக்கும், அவரது உறவினர்களுக்கும் நிலப்பிரச்னை உள்ளது.
இது குறித்த வழக்கு ஓசூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு பிரச்னைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.
‘கர்நாடகா சரக்கு’ விற்ற தி.மு.க., நிர்வாகி கைது
ஓசூர் : அஞ்செட்டியில், கர்நாடகா மது விற்ற தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமூர்த்தி, 27; அஞ்செட்டி ஒன்றிய தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர். அப்பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இதன் பின்புறம், கர்நாடகா மதுபானங்களை பதுக்கி விற்பதாக, ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு மது விற்றுக் கொண்டிருந்த திருமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம், 122 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆளுங்கட்சி நிர்வாகி மது விற்று கைதானது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணுக்கு தொல்லை பஸ் நடத்துனர் சிக்கினார்
கொச்சி : கேரளாவில், ஓடும் பஸ்சில் பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நடத்துனரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து மலப்புரம் நோக்கி நேற்று அரசு பஸ் சென்றது. இதில் பெண் பயணி ஒருவர் ஏறினார். அப்போது இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருந்ததால், நடத்துனர் ஜஸ்டின், அந்த பெண்ணை, தன் இருக்கையில் அமரும்படி கூறியதுடன் எர்ணாகுளம் வரை செல்ல டிக்கெட் வழங்கினார்.
இதையடுத்து அந்த பெண், நடத்துனர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். அப்போது நடத்துனர் ஜஸ்டின், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார்.
இதில், பாதிக்கப்பட்ட அந்த பெண், ஆலுவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த அரசு பஸ் நடத்துனர் ஜஸ்டினை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மனைவியை கொன்று தலைமறைவானவர் கைது
ஓட்டேரி : ஓட்டேரி, ஏகாங்கிபுரம் நான்காவது ‘சி’ தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 42. இவரது மனைவி வாணி, 46. காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ், கடந்த 2021ல் அவரை கொலை செய்து, மேஜையின் கீழ், அழுக்கு துணியுடன் உடலை மறைத்து வைத்து தப்பினார்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/gallerye_053310754_3370872.jpg)
இது குறித்து புகாரின்படி, ஓட்டேரி போலீசார் தனிப்படை அமைத்து, ரமேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில், ரமேஷ் சாமியாராக மாறி விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் தேடினர்.
இந்நிலையில், ரமேஷ் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்து, வட மாநிலம் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த போது, தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில், சென்னையில் இருந்து ரயில் மூலம், டெல்லியில் உள்ள ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆசிரமம் செல்ல இருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்