அகமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அகமதாபாத் வருகை தந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 ராஜ்யசபா எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜக 8 எம்.பிக்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் பெற்றிருக்கிறது. தற்போது 8 பாஜக ராஜ்யசபா எம்.பிக்களில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஜூகால்ஜி தாக்கூர், தினேஷ் அனவாதியா ஆகியோரது எம்பி பதவி காலம் முடிவடைகிறது. இதனையடுத்து குஜராத்தில் 3 ராஜ்யசபா இடங்கள் உட்பட நாடு முழுவதும் 10 ராஜ்யசபா எம்பி பதவி காலி இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது. ஜூலை 17-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. குஜராத் சட்டசபையில் போதுமான பலம் இல்லாத காரணத்தால் இந்த 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு போட்டியிடப் போவது இல்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலம் அகதமாபாத் வருகை தந்தார். அவரை பாஜக தலைவர்கள், மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். குஜராத் மாநில ராஜ்யசபா எம்பியாக மீண்டும் ஜெய்சங்கர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.