கன்னியாகுமரி:
கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை வெளியிட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை போலீஸார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணிக் கட்சியில் மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பாஜக ஆதரவாளராகவும் தன்னை காட்டி வருகிறார். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டார் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் கனல் கண்ணன் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில், கிறிஸ்தவ மதபோதகர் உடையில் ஒருவர், பெண்ணுடன் நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவின் பின்னணியில் தமிழ் கவர்ச்சி பாடல் எடிட் செய்து போடப்பட்டிருந்தது. அதற்கு கீழே, “வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான். மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள். மனம் திரும்புங்கள்” என கனல் கண்ணன் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த திமுக நிர்வாகி எஸ்.பி. அலுவலக்ததில் புகார் அளித்தார். இதன்பேரில், சைபர் க்ரைம் போலீஸார் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன்படி ஆஜரான கனல் கண்ணனை போலீஸார் கைது செய்தனர்.