சென்னை:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவை அரியணை ஏற்றிய வாக்குறுதிகளில் ஒன்று, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை என்பதே. இந்த வாக்குறுதி செயல்படுத்த முடியாத ஒன்று என அதிமுகவினரும், பாஜகவினரும் தொடர்ந்து கூறி வந்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும், இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என அவர்கள் கூறினர்.
ஆனால் நடப்பாண்டு பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி, பெண்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அதே சமயத்தில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்றும், அரசு கூறும் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களே இதற்கு தகுதியானவர்கள் எனவும் அரசு அண்மையில் அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, யார் யார் எல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய முடியும் என்பது குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் இந்தத் திட்டத்தின் கீழ் வருவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத் தலைவிகள் மட்டுமே இந்த 1000 ரூபாய் உரிமைத் தொகையை பெற முடியும் என்பது உறுதியானது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.7000 கோடி நிர்வாக அனுமதி வழங்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.