மதுரை: சென்னையிருந்து தென்காசிக்கு ஆம்னி பஸ்சில் சென்ற இளைஞர், மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக உடன் வந்த பயணிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில் என தென் மாவட்டங்களுக்கு தினசரி ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நீண்ட தூரம் பயணிக்கும் போது சில நேரங்களில் உடல் ரீதியாக சிலருக்கு அசவுகரியம் ஏற்படலாம். முதுகு வலி, கை, கால் வலிபோன்றவை ஏற்படும். இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வெறும் 26 வயது தான் ஆகிறது. இளைஞர் ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாயமான்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த 26 வயதாகும் முகேஷ் சென்னையில் தொழில் நிமிர்த்தமாக வசித்து வந்தார். சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு கம்பெனியில் முகேஷ் வேலை செய்து வந்தார்
இவரது உறவினர் தென்காசியில் ஞாயிறு அன்று விஷேசம் வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பிய முகேஷ், தென்காசி செல்லும் ஆம்னி பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
இதன்படி தென்காசியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தனியார் ஆம்னி பேருந்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏறினார்.
அந்த பேருந்து சென்னையில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு ஞாயிறு அதிகாலை 4 மணி அளவில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்தது. அப்போது முகேஷ் திடீரென வாந்தி எடுத்துள்ளார். அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு முகேஷ் தொடர்ந்து பயணித்தார். அந்த பேருந்து திருமங்கலம் நோக்கி வந்துள்ளது.
திருமங்கலம் ஆனந்தா தியேட்டர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது, முகேஷ் பேருந்துக்குள் மயங்கி விழுந்து விட்டார்.இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து பரிசோதனை செய்தபோது வாலிபர் முகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின் உடலை பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் பயணித்த சக பயணிகளுடன் அந்த பஸ்சை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு முகேஷ் அருகில் அமர்ந்து பயணித்த பயணிகளிடம் போலீசார்தீவிர விசாரணை நடத்தினர். இதனால் பேருந்தில் பயணித்தவர்கள் சுமார் 3 மணி நேரம் காவல் நிலையத்திலேயே காத்துக்கிடந்தனர். தீவிர விசாரணைக்கு பின்பு அவர்களை போலீசார் அனுப்பிவைத்தனர். அதைதொடர்ந்து அந்த பஸ் பயணிகளுடன் புறப்பட்டு தென்காசி நோக்கி சென்றது. இந்த சம்பவத்தால் திருமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.