தமிழகத்தில் மதுவிலக்கு எவ்வாறு கொண்டுவருவது என்பது பற்றி பா.ஜ.க சார்பில் வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாகவும், பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலினிடம் நேரம் கேட்டு அண்ணாமலை எழுதியிருக்கும் கடிதத்தில், “மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பா.ஜ.க-வின் கனவு மட்டுமல்ல, தமிழக பொது மக்களின் விருப்பமும்கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பா.ஜ.க தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வகுத்திருக்கிறது.
இது குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாக நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன். இது தொடர்பாக, கரு.நாகராஜன் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களைச் சந்தித்து, பா.ஜ.க-வின் திட்டத்தினை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறேன். ஆகவே தாங்கள், வருகின்ற ஜூலை 11 முதல் 13-ம் தேதி அல்லது இந்த மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், நேரத்தை சந்திப்புக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களது பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், “தமிழகத்தில் மதுவிலக்கை ஒழிக்க அண்ணாமலை ஒரு வெள்ளை அறிக்கை மூலம் முதலமைச்சருக்கு ஆலோசனை தரவிருக்கிறார். அதுபற்றி கடந்த 8-ம் தேதி முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதனை ஏற்று முதலமைச்சர் ஆலோசனை கேட்டுக்கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் வருவாய் இழப்பை எப்படி மாற்று வழியில் ஈடு செய்யலாம் என்று அண்ணாமலை ஆலோசனை தருவார். இதனை முதலமைச்சர் ஏற்று எங்களை அழைக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய கரு.நாகராஜன், “அண்ணாமலை குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் தெரியாமல் உளறுகிறார். அண்ணாமலை எங்கே உதயநிதி ஸ்டாலின் எங்கே… அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க முடியுமா… தமிழக மகளிர்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது என்பதைத்தான் இந்தப் பெண்கள் உரிமைத் தொகை திட்டம் காட்டுகிறது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு பெண் என்று கணக்கெடுத்தாலே இரண்டு கோடிக்கும் மேல் பெண்கள் உள்ளனர், இது ஒரு ஏமாற்றும் திட்டம்” என்றார்.