யமுனை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அவசர ஆலோசனை

புதுடெல்லி: டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா முதலான வட மாநிலங்களில் கனமழை பெய்துவரும் சூழலில், அங்கே மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “அரசாங்கம் மழை, வெள்ள நிலவரங்களை கூர்ந்து கவனித்து வருகிறது. ஹரியாணாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், யமுனை ஆற்றில் தண்ணீரின் அளவு 206 மீட்டர் நெருங்கும்போது தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக பெய்யும் இந்த மழை காரணமாக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அரசு அமைப்புகள் இத்தகைய நிலையை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் மழைக்குப் பின்னர் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கும். அந்தத் தண்ணீரை ஒன்றிரெண்டு மணி நேரங்களில் வெளியேற்றுவோம். ஆனால், 153 மில்லி மீட்டர் மழை என்பது எதிர்பார்க்கப்படாதது. இது 40 ஆண்டுகளில் நடந்திராத நிகழ்வு” என்றார்.

அவரது இந்தக் கருத்து இணையவாசிகள் மத்தியில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, டெல்லி அரசு சார்பில் நேற்று யமுனை ஆற்றில் வெள்ள அபாயக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் பழைய ரயில்வே பாலம் அருகே வெள்ள நீர் 203.18 மீட்டர் அளவில் கரை புரண்டோடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10 மணியளவில் இதே பகுதியில் தண்ணீரின் அளவு 204.5 மீட்டராக இருந்தது. நாளை காலை 10 மணிக்கு இது 205.5 மீட்டராகவும் நண்பகலுக்கு மேல் இது 205.33 மீட்டராகவும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிர்வள ஆணையத்துடன் கலந்து அலோசித்திருப்பதாகவும் மழை நீடித்தாலும் அது கனமழையாக நீடிக்காது என்றும் முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் “இடைவிடாமல் பெய்யும் கனமழையால் நிச்சயமாக ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்திருக்கலாம். அதை சரிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கிரேட்டர் கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் உருவான சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

பஞ்சாப்பிலும் பாதிப்பு: டெல்லியைப் போல் பஞ்சாப் மாநிலத்திலும் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மழை, வெள்ள நிலவரம் குறித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் வெள்ள நிலவரம் பற்றி கேட்டறிந்ததாகவும் கூறினார்.

பாட்டியாலாவில் ஆறுகளில் அபாய எல்லையைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுவதால் தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் உதவியைப் பெற்று மக்களைக் காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளார். டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி ஆட்சி தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > வட மாநிலங்களில் கனமழை, வெள்ள பாதிப்பு: 22 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.