புதுச்சேரி: விலைவாசி உயர்வால் புதுச்சேரி மக்கள் படும் துயரங்கள், ஏ.சி. காரில் வலம்வரும் முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவதில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி குற்றம் சாட்டி உள்ளார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜா திரையரங்கம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் காய்கறிகளுக்கும், சிலிண்டருக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செய்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது. அதோடு, தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநரக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், சில வருடங்களுக்கு முன்பு விலை ஏற்றம் குறித்து பேசிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அதில், “டீசல் விலை திடுக்கிட வைக்கிறது. பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது. கியாஸ் விலை கவலைப்பட வைக்கிறது. மண்ணெண்ணை விலையோ மரண அடி கொடுக்கிறது” என்று தமிழிசை பேசி உள்ளார்.
போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம் எம்.பி, ”விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கிறது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசிய ஆடியோக்களை கேட்டிருப்பீர்கள். தக்காளி விலை உயர்வு சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. எல்லா காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. மட்டனை விட காய்கறி விலை அதிகமாக உள்ளது. காய்கறி இல்லாமல் எப்படி சமைக்க முடியும்? விலைவாசி உயர்வு குறித்து இந்த அரசு எதுவும் பேச மறுக்கிறது. புதுச்சேரி வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விலைவாசி உயர்வு குறித்து பேசவில்லை. முதல்வர் ரங்கசாமி, மத்திய நிதி அமைச்சரிடம் புதுச்சேரிக்கு எந்த திட்டத்தையும் கேட்கவில்லை.
கடல் அரிப்புக்கு எந்த திட்டமும் இந்த அரசிடம் இல்லை. பொதுப்பணித் துறையில் வரைபடம் போடக் கூட ஆள் இல்லை. புதுச்சேரியில் மின்வெட்டு இல்லாத நாளே இல்லை. இது அரசாங்கத்துக்கு தெரியவில்லை. ஏ.சி.காரிலேயே ஆட்சியாளர்கள் செல்வதால் மக்கள் கஷ்டம் அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் மிக பெரிய கார் வைத்துள்ளார்கள். அதில் ஒரு வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. முதல்வர், அமைச்சர்கள் கார் கண்ணாடியைக் கூட கீழே இறக்குவது இல்லை. இதனால் மக்கள் பிரச்சினைகள் அவர்களுக்குத் தெரிவதில்லை. இவர்களை விட ஆளுநர் மிக மோசம். மதுக்கடைகள், சாராயக் கடைகளை மட்டுமே திறந்து வருகிறார். ஏனாமில் சூதாட்ட கிளப்புகளை திறக்கிறார். மக்கள் வெளியில் வந்து போராட்டம் நடத்தினால்தான் இதற்கு விடியல் வரும் என்ற காரணத்தினால் தான் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. மாநில அரசாங்கத்தை கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தும்” என்று தெரிவித்தார்.