Doctor Vikatan: சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது கூட்டத்தில் சிலர் பயன்படுத்தும் நறுமணப் பொருள்கள், என் மூக்கைத் துளைத்து மயக்க நிலையை ஏற்படுத்துகின்றன. வண்டியில் எனக்கு முன்பாகச் செல்பவர்களின் வாசனையும் என்னைத் தடுமாற வைக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
அதிக வாசனை இருக்கும் பகுதிகளில், நறுமணமாக இருந்தாலும் சரி, கெட்ட வாடையாக இருந்தாலும் சரி, ஒருவித அசௌகர்யம் ஏற்படுவதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். அது போல் இல்லாமல், மிதமான வாசனை இருக்கும் பகுதிகளில்கூட, தடுமாற்றமோ அல்லது மயக்கம் வருவது போலவோ உணர்ந்தால் அது நார்மல் கிடையாது.
மூக்கிலோ அல்லது நரம்பு மண்டலத்திலோ ஏதாவது பாதிப்பு இருந்தால் இப்படிப்பட்ட அறிகுறி தென்பட வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் முதலில் காது- மூக்கு- தொண்டை மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள். அப்படி இருப்பது தெரிந்தால் அதைச் சரி செய்வதற்கான சிகிச்சையை எடுப்பதன் மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
இந்தப் பிரச்னை சமீபகாலமாகத்தான் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இதெல்லாம் இயல்பான விஷயம்தான் என அலட்சியமாக விட வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.