ரோம், உடல்நலக் குறைவால் கடந்த மாதம் காலமான இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தன், 33 வயது காதலிக்கு, 900 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை உயில் எழுதி வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் பிரதமராக, மூன்று முறை பதவி வகித்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. ‘போர்ஸா இத்தாலியா’ எனும் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த ஜூன் 12ல், 87வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு, 6 பில்லியன் யூரோ அதாவது, இந்திய மதிப்பில் 5.40 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு உள்ளது.
இரு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற சில்வியோ பெர்லுஸ்கோனி, தன் கட்சியைச் சேர்ந்த மார்டா பேசினா, 33, என்பவருடன், 2020 மார்ச் முதல் உறவில் இருந்தார்.
அவரை திருமணம் செய்யவில்லை என்றாலும், பல்வேறு இடங்களில் அவரை தன் மனைவி என சில்வியோ பெர்லுஸ்கோனி குறிப்பிட்டார்.
இந்நிலையில், தன் காதலி மார்டா பேசினாவுக்கு, 900 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை, சில்வியோ பெர்லுஸ்கோனி உயில் எழுதி வைத்துள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. அவர் எழுதி வைத்திருந்த உயில், அவரது ஐந்து குழந்தைகள் மற்றும் பிற சாட்சிகள் முன்னிலையில் சமீபத்தில் வாசிக்கப்பட்டது.
அதன் விபரம்:
காதலி மார்டா பேசினாவுக்கு, சுய விருப்பத்தின்படி, 900 கோடி ரூபாய் சொத்துக்களை அளிக்கிறேன்.
எனக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் பொறுப்புகளை, மூத்த மகன்கள் இருவரிடம் ஒப்படைக்கிறேன்.
மீதமுள்ள அனைத்து சொத்துக்களையும், என் ஐந்து குழந்தைகளான மெரினா, பியர் சில்வியோ, பார்பரா, எலியோனோரா மற்றும் லுாய்கி ஆகியோருக்கு சமமாக பங்கிட்டு கொடுக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்