சென்னை: எம்.எஸ்.தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் எல்.ஜி.எம் திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா,நதியா,யோகி பாபு,டிவிவி கணேஷன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் விட்னெஸ், தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கி இசையும் அமைத்துள்ளார்.
லெட்ஸ் கெட் மேரிட்: காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. இந்த நிலையில், சென்னையில் இன்று ‘லெட்ஸ் கெட் மேரிட்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிட்டார்.
வித்தியாசமான காதல் கதை: இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் ஒரு வித்தியாசமான காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. அதாவது திருமணத்திற்கு முன் மாமியார் எப்படி பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து டூர் போகிறார்கள். டூர் போன இடத்தில் நதியாவும், இவானாவும் நட்டநடு காட்டில் தொலைந்துபோக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கலகலப்பாக நகைச்சுவையுடன் டிரைலர் வெளியாகி சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது.
நான்கு மொழியில்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எல்.ஜி.எம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.