சென்னை: கர்நாடகாவில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவு நடைமுறைகள் தொடர்பாக தமிழக பதிவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவு நடைமுறைகள் சிறப்பாக பின்பற்றப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. அது குறித்து அறிந்துகொள்ள தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவின் பேரில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி தலைமையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவம் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு பெங்களூருக்கு சென்றது.
இவர்கள் கர்நாடக அரசின் பதிவுத் துறை தலைவர் மம்தா,துறையின் பிற அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் பின்பற்றப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பதிவு நடைமுறைகள் குறித்து தெரிந்து கொண்ட குழு, மல்லேஸ்வரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பத்திரப்பதிவின் பொதுவான நடைமுறைகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்தனர்.