சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டேயிடம் பறிகொடுத்துள்ளார். தேர்தல் கமிஷன் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது வரும் 31-ம் தேதி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் சம்மதம் தெரிவித்துள்ளது. தற்போது உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் விதர்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அமராவதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில், “சிவசேனா என்ற பெயரை எனது தாத்தா கொடுத்தார். அதனை யாரையும் திருட விடமாட்டேன்.
கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கலாம். ஆனால் அரசியல் கட்சியின் பெயரை மாற்ற தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது. உங்களது பெயரை மாற்றினால் அதை விரும்புவீர்களா? பிரதமர் மோடிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்றால், ஏன் வேறு கட்சிகளை உடைக்கவேண்டும். அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில் இதை செய்கின்றனர். நீங்கள் சிவசேனாவை திருடுனீர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை திருடுனீர்கள்.
நாளைக்கு வேறு ஒரு கட்சியை திருடுவீர்கள். நாட்டிற்கு சொந்தமானவற்றை விற்பனை செய்வீர்கள். மற்றவர்களுக்கு சொந்தமானதை கொள்ளையடிப்பீர்கள். வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு போன்றவற்றை ஒதுக்கிவிட்டு விட்டு அரசியல் செய்ய துணிச்சல் இருக்கிறதா? பா.ஜ.க.வை சிவசேனா தனது தோளில் சுமந்து அக்கட்சியை வளர்ச்சியடைய செய்தது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உங்களை(மோடி) குப்பை தொட்டியில் தூக்கி எரிந்தார்.
தற்போதைய பிரதமருக்கு ஆதரவாக பாலாசாஹேப் தாக்கரே நிற்கவில்லையெனில் இன்றைக்கு பிரதமராக இருக்க முடியுமா. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ.க.எதையும் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட் கோர்ட்தான் இது தொடர்பாக முடிவு செய்தது.
பா.ஜ.க கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் போலியானது. இது குறித்து சிவசேனா தொண்டர்கள் மக்களிடம் சென்று எடுத்து சொல்லவேண்டும். சிலர் நான் ஓட்டுப்பிச்சை கேட்டு வந்திருப்பதாக கூறுகின்றனர். வாக்காளர்கள் தான் மன்னர்கள். அவர்களிடம் ஓட்டுக்கேட்கத்தான் வந்தேன். வாக்காளர்களை அடிமைகளாக கருதவில்லை” என்று தெரிவித்தார்.