சென்னை:
“ஆளுநர் அவருக்கான வேலையை மட்டும் பார்க்கணும்.. அரசியல் எல்லாம் பேசக்கூடாது” என இரு தினங்களுக்கு முன்பு காட்டமாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது கவர்னரை ஆதரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை பொதுவெளியில் விமர்சித்து வந்த ஆளுநர் ரவி, பின்னர் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசத் தொடங்கினார்.
திமுகவின் அடையாள முழக்கமான திராவிட மாடலை ‘இறந்துபோன மாடல்’ என விமர்சித்தார். அதே சமயத்தில், பாஜக தூக்கிப்பிடிக்கும் சனாதன தர்மத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
“ஆளுநர் அரசியல் பேசக்கூடாது”:
இதனால் ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலினும், திமுகவினரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். மேலும், நேற்றைய தினம் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநர் என்றால் அவருக்கான வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அரசியல் எல்லாம் பேசக்கூடாது” எனக் கூறினார்.
“அண்ணாமலைக்கு பொறாமை”:
இதனிடையே, மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தமிழக பாஜக தலைவரே விமர்சிக்கும் வகையில் பேசியது பெரும் விவாதப்பொருளாக மாறியது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு எதிராக வானதி சீனிவாசன் எம்எல்ஏ, புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் சீமான் கூறுகையில், “தான் பேச வேண்டியதை எல்லாம் ஆளுநர் பேசுகிறாரே.. நம்மை அவர் ஓவர்டேக் செய்துவிடுவாரோ” என்ற பொறாமை அண்ணாமலைக்கு இருப்பதாக கூறியிருந்தார்.
திடீரென ஆளுநருக்கு சப்போர்ட்:
இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக முதல்வர் கடிதம் எழுதியது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் கண்ணாடியில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். இல்லாத பிரச்சினைக்கெல்லாம் ஆளுநர்தான் காரணம் என்பது போல அவர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. விலைவாசி உயர்வு, கள்ளச்சாராய மரணம் என அத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன.
வாயை முடிக்கொண்டு இருக்கணுமா?
அதில் கவனம் செலுத்துவதை விட்விட்டு ஆளுநரை சீண்டி பார்ப்பது சரியல்ல. முதல்வரின் கடிதத்தை படிக்கும் போது செந்தில் பாலாஜி என்னவோ புத்தராகவும், உத்தமராகவும் வாழ்ந்ததை போல எழுதியிருக்கிறார். ஏன் இத்தனை பொய்கள்? ஒரு ஆளுநருக்கான மரியாதை இன்று ஆர்.என். ரவிக்கு திமுகவினர் கொடுக்கிறார்களா? ஒருமையில் பலர் பேசி வருகின்றனர். ஆளுநர் என்றால் அமைதியாக வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமா? தனது கருத்தை கூட அவர் கூறக்கூடாதா?” என அண்ணாமலை கூறினார்.