புதுடெல்லி: பொது சிவில் சட்டத்திற்கு இந்து மடாலயங்களின் தலைமை அமைப்பான அகில இந்திய அஹாடா பரிஷத் ஆதரவு அளித்துள்ளது. இச்சட்டத்தில் பழங்குடிகளுக்கு விலக்கு அளிக்கும் யோசனைக்கு ஆர்எஸ்எஸ் பாராட்டு தெரிவித்துள்ளது.
பாஜகவின் முக்கிய மூன்று கொள்கைகளில் ஒன்றான பொது சிவில் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதனை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதையடுத்து, அகில இந்திய அஹாடா பரிஷத் கூடி ஆலோசனை செய்தது. இது, நாடு முழுவதிலும் உள்ள 13 இந்து மடாலயங்களின் தலைமை அமைப்பு ஆகும். இந்த அமைப்பு, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு அளிப்பதுடன் அரசுக்கு உதவவும் தயார் என அறிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய அஹாடா பரிஷத்தின் தலைவர் ரவீந்திராபுரி கூறும்போது, “நாட்டின் அனைத்து குடிமகன்களும் தங்களுக்குள் சரிநிகரானவர்களே. இவர்களுக்கு இடையே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த வித்தியாசமும் காட்டக் கூடாது. இதில் சில மதத்தினர் கூடுதலான சலுகைகள் பெற்றிருப்பது தவறு. இதை எடுத்துரைக்க தேசிய அளவில் அரசுக்கு ஆதரவாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். கையெழுத்து இயக்கமும் நடத்தி தேசிய சட்ட ஆணையத்திற்கு அனுப்புவோம்” என்றார்.
துறவிகளின் தேசிய அமைப்பான அகில இந்திய தண்டி துறவிகள் பரிஷத்தினரும், பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். மதத்தின் பெயரால் பொது வெளியில் ஜனத்தொகை அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் இத்துறவிகள் அமைப்பு கூறியுள்ளது. இதை சீக்கியர், பவுத்தர் மற்றும் ஜைன மதத்தினர் இடையே எடுத்துரைக்க இருப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பொது சிவில் சட்டம் குறித்து சட்டத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை செய்திருந்தது. இக்கூட்டத்தில் பழங்குடிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் முடிவை பாஜக உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் மீது, பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பழங்குடிகள் பிரிவு டெல்லியில் கூடி ஆலோசித்தது. அகில பாரத வனவாசி கல்யாண் ஆசிரமம் எனும் பெயர்கொண்ட இந்த அமைப்பு, பொது சிவில் சட்டத்தில் பழங்குடிகளுக்கு விலக்கு அளிக்கும் யோசனையை பாராட்டி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் துணைத் தலைவர் சத்யேந்தர்சிங் கூறும்போது, “சட்டத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் சுஷில்குமார் மோடி முன்வைத்துள்ள, பழங்குடிகளுக்கு விலக்கு அளிக்கும் யோசனையை நாங்கள் வரவேற்கிறோம்.இந்த விஷயத்தில் அவசரப்படாமல், பழங்குடிகளின் திருமணம்,விவாகரத்து, சொத்துரிமை போன்றகலாச்சாரங்களை புரிந்து கொண்டு, பழங்குடி அமைப்புகளிடம் பேசி முடிவு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பழங்குடிகள் அதிகம் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடிகளின் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. இவர்கள் இடையே பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இம்மாநிலங்களில் ஆளும் பாஜக கூட்டணிக் கட்சிகளும் அதன் முதல்வர்களும் கூடபொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.