கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் கங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கிறார். அம்மாநிலத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூலை 8 ஆம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வன்முறை வெடித்தது. தேர்தல் பிரச்சாரங்களின்போது கட்சியினர் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன. இந்த வன்முறையில் 12 முதல் 18 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பாதுகாப்பு பணியில் 65,000 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கு வங்க மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் நடந்த அன்றும் பயங்கர வன்முறை ஏற்பட்டது.
வன்முறை சம்பவங்களால் பல இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டன. பல வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் வீடியோக்களும் வெளியாகின. இதையடுத்து நேற்று 697 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவின் போதே வன்முறை நடைபெற்றதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவிலும் வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்படுகிறது.