வேலூர்: வேலூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “யப்பா சாமி.. உங்க கேள்வியே போதும்” என கையெடுத்து கும்பிட்டுவிட்டு கிளம்பினார் அமைச்சர் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நேற்று புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர், அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளது குறித்தும், முதல்வர் கோரிக்கையை ஏற்று ஆளுநர் மாற்றப்படுவாரா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் கோரிக்கையை குடியரசு தலைவர் ஏற்கவேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம், அவ்வளவுதான் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் எந்த் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன், “யப்பா சாமி.. உங்க கேள்வியே போதும்.. ஆளை விடுங்க” என கைகூப்பி தனக்கே உரிய பாணியில் கிண்டலாக பதில் கூறிவிட்டு காரில் ஏறினார் அமைச்சர் துரைமுருகன்.
மேலும், மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்க்கும் விவகாரத்தில் ஆட்சிக்கு ஆபத்து உள்ளது, ஆட்சியே போனாலும் கவலை இல்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, அதனை முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார் அமைச்சர் துரைமுருகன்.