வேறுபட்ட கலாசாரத்துடன் திகழும் நாடுகளை ஜி20 நாடுகள் சபை ஒன்றிணைக்கிறது

பெங்களூரு:-

ஜி20 நாடுகள் சபை கூட்டம்

ஜி20 நாடுகள் சபைக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இதையொட்டி ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் அந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த உச்சி மாநாட்டையொட்டி பல்வேறு மட்டத்திலான கூட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பெங்களூருவில் நிதித்துறை தொடர்பான கூட்டங்கள் நடைபெற்றன.

கின்னஸ் சாதனை

இந்த நிலையில் ஜி20 நாடுகளின் 3-வது கலாசார செயல் குழு கூட்டம் கர்நாடக மாநிலம் கலாசார நகரமான விஜயநகர் மாவட்டம் ஹம்பியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜி20 நாடுகள் உள்பட 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 2-வது நாளாக இந்த கூட்டம் ஹம்பியில் நேற்று நடைபெற்றது.

இதில், லம்பானி இனத்தை சேர்ந்த 450 பெண்கள் தயாரித்த 1,755 எம்பிராய்டரிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதுவரை ஒரேநேரத்தில் 1,000 எம்பிராய்டரிகளை காட்சி வைக்கப்பட்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது லம்பானி இன பெண்கள் அதிக எம்பிராய்டரிகளை தயாரித்து அந்த சாதனை முறியடிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இதில் மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரி, சுரங்கத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி கலந்து கொண்டு லம்பானி இன பெண்களின் சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பிரதமர் மோடியும் டுவீட்டர் மூலம் பாராட்டி உள்ளார்.

4 முக்கிய அம்சங்கள்

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்த ஜி20 நாடுகளின் கூட்டத்தில் பாதுகாப்பு, கலாசார சொத்துகளை சொந்த நாடுகளுக்கே திருப்பி கொடுத்தல், நிலையான எதிர்காலத்திற்காக பண்பாட்டு பகுதிகளை பயன்படுத்துதல், கலாசார மற்றும் படைப்பாற்றல் தொழில்கள் மற்றும் படைப்பாற்றால் பொருளாதாரம் ஆகிய 4 முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு அம்சமும், கலாசார ரீதியாக பிரிந்துள்ள உலகம் இன்னும் ஒன்றுபடவில்லை என்பதை காட்டுகிறது. ஜி20 நாடுகள் சபையின் இத்தகைய கூட்டங்கள், கலாசாரத்தை கொள்கை முடிவு எடுக்கும் இடத்தில் காட்ட உதவுகிறது.

வேறுபட்ட கலாசாரத்துடன்…

இந்த 4 அம்சங்களை அடையாளம் காண்பதிலும், அவை குறித்து விவாதிப்பதிலும் செயல்பாடு சார்ந்த பரிந்துரைகளை ஏற்படுத்துவதிலும், அவற்றில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளோம். இதை நாங்கள் கொள்கை முடிவு எடுக்கும் இடத்தில் கொண்டு வந்து சேர்த்து இருப்பது முக்கியமான நடவடிக்கை ஆகும். வேறுபட்ட கலாசாரத்துடன் திகழும் நாடுகளை ஜி20 நாடுகள் ஒன்றிணைக்கிறது.

இத்தகைய கூட்டம் நமது மனித சமூகம் நமது வேறு பாடுகளை மதிக்கும் அனுபவங்களை கற்று கொடுக்கிறது. கலாசாரம் தனித்துவமானது. நமது பழக்க வழக்கங்கள் உள்ளடக்கம், மாண்புகள், மொழிகள், கலைகள் ஆகியவற்றின் துடிப்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை விவரிக்கிறது. இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.

படைப்பாற்றல் பொருளாதாரம்

அதைத்தொடர்ந்து மத்திய கலாசாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-இந்த 4 அம்சங்கள் தொடர்பாக பகிரப்படும் அனுபவங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி செய்கிறோம். கலாசார நினைவு சின்னங்கள், கலாசார பண்பாட்டு தலங்களில் கலாசார பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வசதியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதன் புரிதல் மூலம் படைப்பாற்றல் பொருளாதாரத்தை உருவாக்க முடியும். கலை பொருட்களை உருவாக்கும் விவரங்கள் குறித்த ஒரு கண்காட்சிக்கு இங்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

கலாசாரம் மற்றும் கலாசார தொழில்களை ஊக்குவித்தல், கலாசார பொருளாதாரத்தை ஏற்படுத்துதல் தான் இந்த கண்காட்சியின் நோக்கம். இந்தியாவில் கைகளால் உருவாக்கப்படும் பொருட்களின் இடங்கள், இந்தியாவின் படைப்பாற்றல், உற்பத்தி, வணிகம், பயன்பாடு ஆகியவை குறித்து இந்த நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறு கோவிந்த் மோகன் கூறினார்.

இந்த கலாசார குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) நிறைவடைகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.