புதுச்சேரி:7 கி.மீ.,க்கு, புதுச்சேரியின் பிரதான வீதிகளில், 7 கி.மீ.,க்கு, மது மற்றும் கஞ்சா போதையில், காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று, 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்திய, சென்னை போதை வாலிபர்களை, பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் உள்ள, ‘பாண்டி மெரினா’ கடற்கரையில் இருந்து, நேற்று மதியம், 2:15 மணிக்கு புறப்பட்ட கருப்பு நிற, ‘ஹோண்டா சிட்டி’ கார், வம்பாகீரப்பாளையம் அருகே ஒரு பைக் மீது மோதி, நிற்காமல் சென்றது.
அப்பகுதி இளைஞர்கள் சிலர், காரை துரத்தினர். கார், செஞ்சி சாலை, ரங்கப்பிள்ளை வீதி வழியாக, மிஷன் வீதிக்குள் நுழைந்தது.
அங்கிருந்து, ஒரு வழி பாதையான நேரு வீதியில் திரும்பி, ராஜா தியேட்டர் நோக்கி, அதிவேகமாக சென்றது. போக்குவரத்து போலீசார் தடுத்த போதும், கார் நிற்காமல் பறந்தது.
எதிரில் வந்த ஐந்து பைக்குகளை, அடுத்தடுத்து இடித்து தள்ளியபடி சென்ற காருக்கு அடியில், ஒரு பைக் சிக்கிக் கொண்டது. அந்த பைக்கை இழுத்தபடியே, அசுர வேகத்தில் சென்றது.
இதைப் பார்த்த பொதுமக்கள், அலறியடித்து, நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குறுகிய பாதையில் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை இடித்து தள்ளி விட்டு, சென்று கொண்டிருந்தது.
போலீசார், பொதுமக்கள் என, 100க்கும் மேற்பட்டோர், காரை துரத்தி சென்றனர். ஏர்போர்ட் நோக்கி சென்ற கார், நரிக்குறவர்கள் குடியிருப்பு அருகே, சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த ஐந்து இளைஞர்களுக்கும், பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார், பொதுமக்களிடம் சிக்கியிருந்த ஐந்து பேரையும் மீட்டனர்.
விசாரணையில், காரை ஓட்டி வந்தது, சென்னை, மேடவாக்கம், பள்ளிகரணையைச் சேர்ந்த சுனில், 30, என்பதும், காரில் இருந்தவர்கள் அவரது நண்பர்களான ஸ்ரீநாத், 25, ஆஷிக், 21, மேடவாக்கம் விவேகானந்தர் நகர் திலீப், 27, சென்னை நன்னாங்குளம், எபிநேசர், 21, என்பதும் தெரிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி வந்த இவர்கள், பாண்டி மெரினா கடற்கரையில் மது அருந்திய பின் புறப்பட்டு, போதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐந்து பேரும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கார் மோதியதில் காயமடைந்த புதுச்சேரியை சேர்ந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகிய மூவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்