அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்திருக்கும் ‘ஜவான்’ படத்தின் பிரீவியூ டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டிலிருந்து பல இயக்குநர்கள் பாலிவுட்டிற்குச் சென்று வெற்றி வாகை சூடியிருக்கின்றனர். அந்தவரிசையில் அட்லியும் கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு சென்று தனது முதல் படமாக ‘ஜவான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமும் ஜவான்தான். டேவிட் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தாலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முழுப்படத்துக்குமாக இதுதான் அறிமுகமாகிறது. ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு எனப் பலர் இப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகின்றனர். இந்தி வெப்சீரிஸ்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படி கோலிவுட்டைச் சேர்ந்த இப்படத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதால் கோலிவுட்டிலிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணமிருக்கின்றன.
அதுமட்டுமின்றி ஷாருக் கானின் கரியரில் அவர் ‘One 2 Ka 4’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் போலீஸாக நடித்திருக்கிறார். அந்தப் படத்திலுமே அவர் காக்கி உடையுடன் வரவேமாட்டார். இந்தப் படத்தில் மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறாரா என்கிற எதிர்பார்பும் ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் ‘ஜவான்’ படக்குழுவிற்கும், இயக்குநர் அட்லிக்கும் கோலிவுட்டிலிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணமிருக்கின்றன. அந்தவகையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமே பிரமாண்டமாக உள்ளது என்று அட்லிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் ‘லியோ’ படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், “ஜவான் படத்தின் உலகத்தைப் பார்க்கையில் பிரம்மிக்க வைக்கிறது. பாலிவுட்டில் அறிமுகமாகும் சகோதரர்கள் அட்லியும், அனிருத்தும் எப்போதும்போல பிரம்மிக்க வைக்கிறார்கள். படம் மாபெரும் வெற்றி பெற ஜவான் படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் ‘ஜெய்லர்’ படத்தை இயக்கியிருக்கும் நெல்சன், “சூப்பர், அட்லி, அனிருத் இருவருக்கும் இது பாலிவுட்டிக்கான ஒரு பயங்கரமான அறிமுகமாகும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள், சினிமா வட்டாரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.