சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது மாவீரன்.
இந்தப் படத்தின் பிரமோஷன்களை சிவகார்த்திகேயன் அண்ட் டீம் மிகவும் விறுவிறுப்பாக மாஸாக செய்து வருகிறது.
சிவகார்த்திகேயனின் கடந்த படம் பிரின்ஸ் சொதப்பிய நிலையில், தற்போது மாவீரன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் படம் மாதிரி வித்தியாசமான படம் மாவீரன் என சிவகார்த்திகேயன் பேச்சு: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாவீரன். முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு சொதப்பலான ரிசல்ட்டையே கொடுத்தது. முன்னதாக வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கைகொடுத்த நிலையில் பிரின்ஸ் படமும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தற்போது மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். மாவீரன் படம் வரும் ஜூலை 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக படத்திற்கான பிரமோஷன்கள் அதிரடியாக நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கொச்சி, பெங்களூர் என அடுத்தடுத்த இடங்களில் இந்தப் படத்திற்கான பிரமோஷன்கள் நடத்தப்பட்டுள்ளன.
முன்னதாக மாவீரன் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவக்கார்த்தியுடன் படக்குழுவினர் பங்கேற்று, படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்தனர். தான் ரஜினியுடன் முதல் படத்திலேயே நடித்துள்ளதை நினைவு கூர்ந்த நடிகை சரிதா, அவரது செயல்பாடுகள் சிவகார்த்திகேயனுக்கும் அதிகளவில் காணப்படுவதாகவும், அதனால் தான் சூட்டிங்கில் அவரை குட்டி ரஜினி என்றுதான் அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்றுவரும் சிவகார்த்திகேயன், இந்தப் படம் கண்டிப்பாக தனக்கு மிகப்பெரிய சக்சஸை கொடுக்கும் என்று மிகவும் நம்பிக்கையாக காணப்படுகிறார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், லோகேஷ் கனகராஜ், மடோன் குறித்து பேசியதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தான் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் எனவும் மடோன் முதல் பெஞ்ச் ஸ்டூடண்ட் எனவும் லோகேஷ், மடோன் அஸ்வின் குறித்து பகிர்ந்ததை சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
ஆனால் மாவீரன் சூட்டிங்கிற்கு தான் போனபோது, மடோன் அஸ்வின் தனக்கு ஹெட் மாஸ்டராகவே தென்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படம் தன்னுடைய வழக்கமான படமாக இருக்காது எனவும், டாக்டர் படத்தை போல வித்தியாசமான ஜானரில் இந்தப் படம் ரசிகர்களை கவரும் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள், அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் சிறப்பாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.