குவாங்டாங்: சீனாவில் பெண் ஒருவர் மேல் உள்ளாடை பகுதியில் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பெண் கடத்த முயன்ற 5 பாம்புகளையும் போலீசார் மீட்டனர்.
விமான நிலையங்கள் தங்கம், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதும் அவை பிடிபடுவதும் வழக்கம். ஆனால் உலக நாடுகளில் அண்மைக் காலமாக பாம்புகள், ஆமைகள், குரங்குகள் பிடிபடுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்தியாவில் சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்தது. தாய்லாந்தின் பாங்காங் நகரில் இருந்து வந்த பயணி ஒருவரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அந்த பயணியிடம் இருந்து ஒரு குரங்கு, 15 அரியவகை பாம்புகள், 5 மலைப்பாம்புகள், 2 ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பாங்காங்குக்கே பயணியுடன் திருப்பி அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே பாங்காங்கில் இருந்து வந்த தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்த லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஏனெனில் அந்த லக்கேஜ்கள், கூடைகளில் 40 மலைப்பாம்பு குட்டிகள், 13 நாக பாம்பு குட்டிகள், 5 அரியவகை குரங்கு குட்டிகள், 8 வினோத உயிரினங்கள் என ஒரு மிருக காட்சி சாலையையே கடத்தி வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கடத்தி வந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். சிக்கிய 66 உயிரினங்களும் அப்படியே பாங்காங் நகருக்கு பேக்கிங் செய்து அனுப்பி வைக்கப்பட்டன.
அண்மையில் கடந்த ஏப்ரல் மாதமும் இதே போல பாம்பு கடத்தல் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரிடம் இருந்து 23 கொடிய விஷமுள்ள மலைப்பாம்பு குட்டிகள் சிக்கின. அந்த நபர் கைது செய்யப்பட்டு 23 மலைப்பாம்பு குட்டிகளும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கடத்தல் சம்பவங்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
தற்போது மிகவும் நூதனமான முறையில் பாம்புகளை கடத்திய சீனா பெண் ஒருவர் சிக்கி இருக்கிறார். சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஃபுக்சியன் ஹார்பரில் இருந்து ஹாங்காங் செல்ல முயன்ற பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டார். இந்த சோதனையின் போது அவரது மேல் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே 5 பாம்பு குட்டிகளை வெவ்வேறு துணிப் பைகளில் கட்டி மறைத்து வைத்து அந்த பெண் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து பாம்புகள் மீட்கப்பட்டன. அந்த பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நூதனமாக, மேல் உள்ளாடைக்குள் பாம்புகளை மறைத்து வைத்து ஒரு பெண் கடத்தலில் ஈடுபட்ட சம்பவமும் இப்போது இண்டர்நேஷனல் லெவலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.