பெங்களூருவின் அம்ருதஹள்ளி அருகே இயங்கி வரும் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆகியோர், தங்களின் முன்னாள் ஊழியரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பிலிருந்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட நபர்கள், ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் (Aeronics Internet Company) நிர்வாக இயக்குநர் ஃபனிந்திர சுப்ரமணியா, தலைமை செயல் அதிகாரி வினு குமார் என்றும், கொலை செய்த நபர் அவர்களின் முன்னாள் நிறுவனத்தின் ஊழியர் என்றும் தெரியவந்திருக்கிறது.
இதில் சந்தேகப்படும் கொலைக் குற்றவாளி நேற்று மாலை நான்கு மணியளவில், ஃபனிந்திர சுப்ரமணியாவையும், வினு குமாரையும் அவர்களின் அலுவலகத்துக்குள்ளேயே கத்தியுடன் புகுந்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்திருக்கிறார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ஃபனிந்திர சுப்ரமணியாவும், வினு குமாரும் தங்களின் முன்னாள் ஊழியரின் தொழில் நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், அந்த கோபத்தில் தான் அவர்களை அந்த நபர் கொலைசெய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய பெங்களூருவின் வடகிழக்கு பகுதி போலீஸ் அதிகாரி லக்ஷ்மி பிரசாத், “குற்றம் சாட்டப்பட்ட நபருடன் அவரின் கூட்டாளிகள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் மூவரும் தப்பியோடிவிட்ட நிலையில், முக்கியமாகக் குற்றம்சாட்டப்படும் நபரை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். தற்போது அவரின் கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.