மதுரை: சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவுவதை மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி குழந்தைகள் பள்ளியின் ஸ்மார்ட் போர்டு(SMART BOARD) வழியாக நேரலையில் (live telecast) பார்க்க மாநகராட்சி நிர்வகம் ஏற்பாடு செய்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வரும் 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளது. இந்நிகழ்வைப் பார்வையிட பொதுமக்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு அறிவியல் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் இந்த அறிவயில் நிகழ்வை பார்க்க ஏற்பாடுகள் செய்துள்ளன.
இதுபோன்ற அறிவியல் நிகழ்வுகளை நேரடியாக பார்ப்பதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரிய கனவாக இருந்து வருகிறது. அதை நிறைவேற்றிக்காட்டும் வகையில் வரும் 14ம் தேதி அன்று மதியம் 2:10 மணிக்கு மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விண்கலம் ஏவுதலை பார்க்க அப்பள்ளியின் வானவில் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், இஸ்ரோவின் கனவு திட்டமான சந்திராயன்-3 விண்கலம் நிலவுக்கு பயணப்படுப்படுவதை கொண்டாடும் வகையில் அப்பள்ளியின் சுவரில் சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் LVM-3 ராக்கெட்டின் படம், நிலவில் தரையிரங்கப்போகும் லேண்டர், ரோவர் படங்களை வரைந்து மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு திட்டத்தின்பால் விருப்பமும், ஆர்வமும் உருவாகும் விதமாக படங்கள் வரையப்பட்டுள்ளது.
விண்கலம் ஏவுவதற்கு முன் மதியம் 2:15 மணிக்கு இஸ்ரோவின் சாதனைகள், நிகழ்வுகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. சரியாக மதியம் 2:25 மணி முதல் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் 3 விண்கலத்தை, பள்ளியின் ஸ்மார்ட் போர்டு (SMART BOARD) வழியாக நேரடியாக(live telecast) மாணவ, மாணவியர்கள் காண பள்ளி நிர்வாகமும், மாநகராட்சியும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை மதுரை தெற்கு சரக வட்டாரக்கல்வி அலுவலர், மாநகராட்சி கல்வி அலுவலர், கல்வி புரவலர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மாணவர்களோடு இணைந்து காணவுள்ளனர்.
இதற்கிடையில் இன்று இஸ்ரோ இயக்குநருக்கு சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக் குழந்தைகள் வாழ்த்துச் செய்தியை தபால் அட்டை மூலம் அனுப்பி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “அறிவியல் சாகசமும், கண்டுபிடிப்புகளும் கைக்கு எட்டுகிற தொலைவில் இருக்கிறது. நாமும் அதை எட்டிப்பிடிக்கலாம் என்பதை காட்டவும், விண்ணகலம் போன்ற மிகப்பெரிய அறிவியல் நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கும்போது மாணவர்களும் அறிவியல் ஆர்வம் அதிகரிக்க ஆர்வம் ஏற்படும் என்ற பார்வையில் இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது’’ என்றனர்.