சென்னை:
தென் மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்போதுதான் அறிவிப்பு வெளியானது போல இருக்கும் நிலையில், இவ்வளவு சீக்கிரமாக ரயில் வரப்போகிறதா என மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்திய ரயில்வே வரலாற்றிலேயே தனி முத்திரை பதித்திருக்கும் ரயில் வந்தே பாரத். விமானத்துக்கு நிகரான வசதிகள், அதிக வேகம் ஆகியவையே வந்தே பாரத் ரயிலை மக்கள் விரும்ப காரணமாக இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை – கோவை, சென்னை – பெங்களூர் – மைசூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சூழலில்தான், சென்னையில் இருந்து மதுரை வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்த போதிலும், நெல்லை வரை இந்த சேவையை நீட்டிக்க குரல் கொடுக்கப்பட்டது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கும் நெல்லைக்கும் இரு மார்க்கமாக சென்று வரும் நிலையில், இந்தக் கோரிக்கையை ரயில்வே ஏற்றுக்கொண்டது. அதன்படி, சென்னையில் இருந்து நெல்லை வரை வந்தே பாரத் இயக்கப்படும் என்ற இனிப்பான செய்தியை ரயில்வே வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மதுரை மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயிலை நிறுத்தி பராமரிக்க, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை செய்து தருவதற்கான டெண்டரும் விடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த மாத (ஜூலை) இறுதியில் 4 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, டெல்லி டூ சண்டிகர் (243 கி.மீ.), குவாலியர் டூ போபால் (432 கி.மீ.), சென்னை டூ நெல்லை (622 கி.மீ.), லக்னோ டூ பிரயாக்ராஜ் (200 கிமீ) ஆகிய 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக இந்திய ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை இறுதி வாரத்தில் இந்த 4 ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.