செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் 10 ரூபாய் அதிகம் கேட்ட டாஸ்மாக் கடைக்காரர் குறித்து புகார் அளித்த நபரை சரமாரியாக தாக்கிய உதவி காவல் ஆய்வாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்கும் போக்கு ஒரு வழக்கமாகவே மாறியிருந்தது. மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட போதிலும், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இவ்வாறு கூடுதலாக வாங்கப்படும் பணம், செந்தில் பாலாஜிக்குதான் அனுப்பி வைக்கப்படுவதாக பல டாஸ்மாக் ஊழியர்களும் கூறிய சம்பவங்களும் அரங்கேறின.
இதனிடையே, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த துறைக்கு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் யாரும் 10 ரூபாய் அதிகமாக கேட்கக்கூடாது என அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக ஊழியர்கள் வசூலித்துள்ளனர். அப்போது அங்கிருந்த மதுப்பிரியர் இதுதொடர்பாக அங்கிருந்த செங்கல்பட்டு நகர உதவி காவல் ஆய்வாளர் ராஜாவிடம் புகார் கூறினார். ஆனால், ராஜாவோ டாஸ்மாக் ஊழியரை எதுவும் கேட்காமல், புகார் கூறிய நபரை சரமாரியாக தாக்கினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏஎஸ்ஐ ராஜாவை செங்கல்பட்டு எஸ்.பி. சாய் பிரனீத் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.