புதுடில்லி, ஜூலை 12-
அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வரும், 31ம் தேதிக்குள் அவர் ஓய்வு பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை இயக்குனராக, மூத்த ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை பிரிவு அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ரா, 2018, நவ., 19ல் நியமிக்கப்பட்டார்.
இவருடைய இரண்டு ஆண்டு பணிக் காலம், 2020ல் முடிவதாக இருந்தது. அப்போது அவருடைய பணிக் காலம், 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2021 செப்.,ல் அளித்த உத்தரவில், பணி நீட்டிப்பை ஏற்ற உச்ச நீதிமன்றம், இதற்கு மேல் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என, குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., இயக்குனர்கள், வழக்கமான இரண்டாண்டு பணி நீட்டிப்பு காலத்துக்குப் பின், மேலும், மூன்று ஆண்டு கள் நீட்டிக்கும் வகையில், 2021ல் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இதற்காக, மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம், டில்லி சிறப்பு போலீஸ் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டது.
இதன்படி, மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு பெற்ற சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம், வரும், நவ., 18ல் முடிவடைய உள்ளது.
இதை எதிர்த்து, காங்கிரசின் ரன்தீப் சுர்ஜேவாலா, ஜெயா தாக்குர், திரிணமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா, சாகேத் கோகலே உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. கடந்த, மே, 8ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமர்வு கூறியுள்ளதாவது:
சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு அளித்தது சட்ட விரோதமாகும். சர்வதேச அமைப்பான எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆய்வு நடந்து வருகிறது.
இதனாலும், பணியை ஒப்படைக்க அவகாசம் அளிக்கும் வகையிலும், வரும், 31ம் தேதி வரை மட்டும் அவர் பணியாற்றலாம்.
அதே நேரத்தில், மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம், டில்லி சிறப்பு போலீஸ் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் செல்லும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது!
உச்ச நீதிமன்ற உத்தரவால் சிலர் மகிழ்ச்சி அடைவது ஒரு மாயை. பார்லிமென்டால் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை அவர்கள் கவனிக்க வேண்டும். அமலாக்கத் துறையின் இயக்குனர் யார் என்பது பிரச்னையில்லை. யார் அந்தப் பதவியில் இருந்தாலும், நாட்டின் நலனுக்கு எதிரான மனப்போக்குடன், வாரிசு சொகுசுகளை அனுபவித்து பெரும் ஊழல் செய்தவர்கள், தப்பிக்க முடியாது.அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்