புதுடில்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என திட்டவட்டமாக இந்திய அணி கூறி வந்தது. இதனையடுத்து இந்தியா விளையாட உள்ள போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாமல், பொதுவான இடத்தில் நடத்தும் வகையில் அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தான் நாட்டுடனான பிரச்னை காரணமாக அந்நாட்டிற்கு சென்று இந்திய அணி நீண்ட காலமாக விளையாடியதில்லை. இந்த நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவதால், இந்திய அணி அங்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் செல்ல மாட்டோம், தொடரை பொதுவான இடத்திற்கு மாற்ற வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேநேரத்தில், இந்திய அணி வரவில்லை எனில், அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது எனவும் அந்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என இந்தியா பிடிவாதமாக இருந்து வந்தது.
இந்தியாவின் ஆட்சேபத்தை கருத்தில்கொண்டு, மொத்தம் நடைபெற உள்ள 13 போட்டிகளில் 4 போட்டி பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடக்கும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என பிரிமியர் லீக் கிரிக்கெட் தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், ‘ஆசிய கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தானில் லீக் ஆட்டத்தில் 4 போட்டிகள் இருக்கும். இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி உள்பட 9 போட்டிகள் இருக்கும். இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் அது இலங்கையில் நடக்கும்’ எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement