Na.Muthukumar: `காரில் போகும்போதே 10 நிமிடத்தில் எழுதிய பாட்டு!' – நா.முத்துக்குமார் சொன்ன சீக்ரெட்

மானுட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு பருவத்தையும், உணர்வுகளையும் பாடலாசிரியர், கவிஞர் நா.முத்துகுமாரின் பேனா முத்தமிட்டிருக்கிறது.

அதற்கு சான்றாக ‘வெயிலோடு விளையாடி’,’தேரடி வீதியில்’ என பாடல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். காதல், வாஞ்சை,கோபம், துயரம், விடுதலை, மீட்பு என மனித வாழ்வின் அனைத்து தருணத்திற்கும் நா.முத்துக்குமாரின் கவிதையையோ, பாடல்களையோ பொருத்திப் பார்க்கலாம். நா.முத்துக்குமாருக்கு 48 வது பிறந்தநாள் இன்று. நம்மை வீட்டு விண்ணை அடைந்தாலும் நா.முத்துக்குமாரின் வரிகள் தமிழ் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. அவரது பாடல்கள் சிலவற்றை அவர் எப்படி எழுதினார் என்பதை அவரே கூறியிருக்கிறார். அந்தப் பகிர்வு இதோ!

Na. Muthukumar

இப்படி ஒரு இடமிருந்தால் தான் எனக்கு புத்துணர்ச்சியுடன் பாடல் எழுதுவதற்கு இலகுவாக இருக்கும் எனச் சொல்கிற பல பாடலாசிரியர்களின் பேட்டிகள் நம் செவிக்கு பழக்கமாகியிருக்கும். இப்படி ஒரு கேள்விக்கு நா.முத்துக்குமாரின் பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.நா.முத்துக்குமாருக்கு நெருக்கடியான சூழ்நிலையில் தான் பாடல்கள் எழுதுவதற்கு அதிகளவில் பிடிக்குமாம். பெரும்பான்மையாக அவரது வீட்டின் அறையிலோ, ரெக்கார்டிங் ஸ்டுடியோகளிலோ தான் பாடல்கள், கவிதை எழுதவருமாம். ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் சுவாரஸ்சியமான பல தருணங்கள் அமைந்திருக்கும்.  

அதைப் போல தன் பாடல்களுக்கு பின்னால் இருக்கும் கதைகளை நினைவலைகளாக நா.முத்துக்குமார் விவரித்திருக்கிறார். முதலில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ‘வாமனன்’ திரைப்படத்தின் பாடல்கள் குறித்து அவர் கூறியதாவது,” ’வாமனன்’ திரைப்படத்திற்கு முதலில் மூன்று பாடல்களுக்கு டியூன் போட்டு கம்போஸ் செய்துவிட்டோம். அதற்கான ரெக்கார்டிங் மும்பையில் நிகழ்ந்தது. நான்காவது பாடலை பாடுவதற்கு பாடகர் ரூப்குமார் ராத்தோடை பரிந்துரை செய்தார்கள். அவரது பிஸியான ஷெட்யூலால் பாடல் ரெக்கார்டிங் தள்ளிப்போனது. நானும் சென்னை வந்த பிறகு அந்தப் பாடலை எழுதிவிடலாம் என்று இருந்தேன்.

Na. Muthukumar

ஆனால் திடீரென்று ஒரு நாள் ’இன்று மாலை 5 மணிக்கு ரூப் குமார் ரெக்கார்டிங்’ வருகிறார் எனக் கூறினார்கள். இந்த விஷயத்தை கூறும் போது  மதியம் 3 மணியை எட்டியிருந்தது. அதன் பின்பு போகும் வழியில் காரிலேயே வைத்து இயக்குநருடனும், யுவனுடனும் பேசி அந்த பாடலை எழுதி முடித்தேன், அந்த பாடல் தான் வாமனன் திரைப்படத்தின் ‘ ஒரு தேவதை ‘ பாடல். தலைநகரம் திரைப்படத்தின் ‘ஏதோ நினைக்கிறேன்’ பாடலின் ரெக்கார்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. அந்த நேரத்திற்கு என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அதனால் அந்த பாடலின் டியூனை தொலைபேசி வழியாகவே கேட்டு 10,15 நிமிடங்களில் எழுதி முடித்தேன்.

ஜோதா அக்பர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் வெப் கேம் வழியாக பேசியே எழுதி முடித்தேன்.” என்கிறார்.
நா.முத்துக்குமார் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருந்தாலும், யுவனுடனான கூட்டணிக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. யுவனுடனான ஹிட் லிஸ்டுக்கு ,”யுவன் கொடுத்த சுதந்திரம்தான் காரணம்” என்கிறார். நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கும் தமிழுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இருக்கிறது. அவரது தந்தையும் ஒரு தமிழ் ஆசிரியராம்.

Na Muthukumar

அதுமட்டுமின்றி அறிஞர் அண்ணாவும் ஒரு வகையில் நா.முத்துக்குமாருக்கு தாத்தா முறை தானாம். நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் மனிதனின் ஒவ்வொரு நிகழ்விற்கும் பொருத்தமாக இருக்கும். அந்தப் பாடல்களுக்கான கருப்பொருளை பயணத்தில் இருந்து தான் சேகரிப்பாராம். அதுமட்டுமின்றி பாடல்களை எழுதும் போது அந்த பாடலின் சூழ்நிலையையும், கதாபாத்திரத்தின் தன்மையையும் முழுமையாகக் கேட்டறிந்து அந்தக் கதாபாத்திரம் அவராக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டு அதற்கு அவர் எப்படி எதிர்வினை செய்வார் என்பதை யோசித்தே பாடல்களை எழுதுவாராம். அது போல பல சூழ்நிலைகளின், கதாபாத்திரங்களின் வெளிச்சம்தான் நா.முத்துக்குமாரின் வரிகள். 

நா.முத்துக்குமாரின் வரிகளில் உங்கள் மனதுக்கு நெருக்கமான வரிகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.