சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) ஜெயிலர் படத்துக்காக தன்னை யாரும் கூப்பிடவே இல்லை என சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதில் மோகன் லால்,சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பான் இந்திய படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் படம் உருவாகியிருக்கிறது. கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் படங்களில் ஜெயிலரும் ஒன்று.
கட்டாய ஹிட்: ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகிய இரண்டு பேருக்குமே ஜெயிலர் படம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக ரஜினி நடித்த தர்பார், அண்ணாத்த படங்களும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படமும் தோல்வியடைந்தன. எனவே இந்தப் படத்தின் மூலம் இரண்டு பேருமே கட்டாயமாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர்.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்தச் சூழலில் ஜெயிலர் படம் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தாலும் சென்சேஷனல் டாக் எதுவும் எழாமல் இருந்தது. ஆனால் அதனை மாற்றிக்காட்டியிருக்கிறது படத்திலிருந்து வெளியாகியிருக்கும் காவாலா என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள். ஷில்பா ராவ் பாட அருண்ராஜா காமராஜா பாடலை எழுதியிருக்கிறார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் எங்கும் காவாலா பற்றிய பேச்சுக்களும், ரீல்ஸ்களும், மீம்ஸ்களும்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.
எப்போது ரிலீஸ்?: படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தின் இறுதியில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நெல்சனும், சிவகார்த்திகேயனும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் ஜெயிலரில் சிவாவின் பங்களிப்பு பாடல் எழுதுவதிலோ இல்லை நடிப்பதிலோ இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
யாரும் கூப்பிடவில்லை: ஆனால் அப்படி எதுவும் படத்தில் இல்லை. இதுகுறித்து மாவீரன் புரோமோஷனுக்காக கேரளா சென்ற சிவகார்த்திகேயனிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்துக்காக யாருமே என்னை கூப்பிடவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இதை பார்த்த சிவாவின ரசிகர்கள் அவரை பாடலாவது எழுத வைத்திருக்கலாம் நெல்சன் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். ட்ரெய்லர் வெளியாகியும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.