கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது நிரவ் மோடி உள்ளிட்டோரை விமர்சித்துப் பேசியிருந்தார். இதையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், தீர்ப்பு வெளியான தினத்தன்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் நான்கைந்து பேருடன் சேர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து எழும்பூரில் நடந்த ரயில் மறியல் போராட்டதுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததுடன், “நீங்களே முடிச்சுட்டு வாங்க…” என்று தொண்டர்களிடம் தெரிவித்துவிட்டு, பாதியிலே வெளியேறினார் அழகிரி. இதனால் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள், அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கடந்த 7-ம் தேதி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்குத் தடை கோரி ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அது தொடர்பான கண்டனப் போராட்டத்துக்கும் தாமதமாக வந்த அழகிரி, மறியலில் ஈடுபடாமல் செல்ல முயன்றார்.
இதற்குத் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சிக்குள் களேபரம் வெடித்தது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டாண்டுக்காலச் சிறைத் தண்டனை ரத்துசெய்யப்படவில்லை.
இந்தச் சூழலில் உண்மை, நீதிக்காக ராகுல் காந்தி போராடிவருகிறார். இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி தனியாக இல்லை என்பதை நாம் உணர்த்த வேண்டும். அவரோடு பல லட்சம் காங்கிரஸ் கட்சியினரும், மக்களும் இருப்பதை மீண்டும் வலியுறுத்தவேண்டிய நேரம் வந்திருக்கிறது.
இதில் மூத்த தலைவர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதன்படி நாடு முழுவதும் அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தமிழகத்தில் பெயரளவுக்கு மட்டுமே எதிர்ப்பு காட்டப்பட்டிருக்கிறது. மேலும், இதில் கே.எஸ்.அழகிரி கலந்துகொள்ளவில்லை.
இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் சீனியர்கள், “தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆனால், தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் 100-க்கும் குறைவானவர்களே இருந்தனர். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கலந்துகொள்ளவில்லை.
முன்னதாக அவர் 12-ம் தேதிக்கு பதிலாக 20-ம் தேதி போராட்டத்தை நடத்திக்கொள்ளலாம் எனத் தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த மற்ற தலைவர்கள், கே.சி.வேணுகோபாலிடம் புகார் தெரிவித்துவிட்டனர். அவர் அழகிரியைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருக்கிறார்.
அப்போது அழகிரி, `எனக்கு உடல்நிலை சரியில்லை. மழை வேறு பெய்து வருகிறது. எனவே, வரும் 20-ம் தேதி போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் கடுப்பான வேணுகோபால், `இல்லை… வேறு யாரையாவது வைத்து உடனடியாகப் போராட்டத்தை நடத்த வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்துதான் திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது” என்றனர்.
இது குறித்து அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “தலைவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகத் தனது குரலை அழுத்தமாகப் பதிவுசெய்து வருகிறார். மாநிலம் முழுவதும் போராட்டங்களையும் முடுக்கிவிட்டிருக்கிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான், மௌனப் போராட்டத்தில் அவரால் பங்கெடுக்க முடியவில்லை. வரும் காலங்களில் மத்திய அரசை மேலும் தீவிரமாக எதிர்ப்பார்” என்றனர்.