தருமபுரி: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் கடந்த 2016-21 வரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ரூ.45.20 கோடி சொத்து தொடர்பான இந்த வழக்கில் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் உறவினர்கள் என 11 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 22-ம் தேதி போலீஸார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேதியாக ஜூலை 13-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று(ஜூலை 13) இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இனி முதன்மை அமர்வு நீதிமன்றம் மூலம் சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடைமுறைகள் தொடங்கப்படும் என நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவித்தனர்.