சிம்லா,
இமாசலபிரதேசத்தின் சிம்லா மாவட்டம் லட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ் பாண்ட்லா (வயது 33). இவர் நோய்வாய்ப்பட்ட தனது அம்மா சந்தலா தேவியை (55) ராம்பூர் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்ப்பதற்காக தனது காரில் நேற்று முன்தினம் இரவில் அழைத்துச் சென்றார். காரில் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேர் இருந்தனர்.
இரவு 10.45 மணி அளவில் கார், தேசிய நெடுஞ்சாலையில் நூக்லி பகுதி அருகே வந்தபோது, மழையால் சாலை சேதம் அடைந்திருந்ததால், நிலைதடுமாறி ஓடிய கார், அருகில் ஓடிய சட்லெஜ் ஆற்றில் பாய்ந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று பிற்பகல் வரை காரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்றும், இதனால் காரில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.