உச்சகட்ட அலர்ட்டில் டெல்லி… வெள்ள அபாய கட்டத்தை தாண்டிய யமுனை ஆற்றின் நீர்மட்டம்!

டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த வார இறுதியில் தொடங்கி பெய்து வரும் கனமழையானது அந்தந்த மாநிலங்களில் கடும் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் முக்கியமாக இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளமானது குடியிருப்பு பகுதிகள், வாகனங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், ஆங்காங்கே உயிர்களையும் பறித்தது.

இமாச்சலப் பிரதேசம் 2023

இந்த நிலையில் இமாச்சல். ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையானது டெல்லியில் வெள்ள அபாய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த மழையால் ஹரியானாவிலுள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணை நிரம்பி வழிந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் உபரி நீரானது நேராக யமுனை ஆற்றில் கலப்பதால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய கட்ட அளவான 205 மீட்டரை விடவும் 3 மீட்டர் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், இன்று காலை 7 மணியளவில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208.46 மீட்டர் என அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் டெல்லியின் பல இடங்கள் நீர் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய கட்ட அளவைத் தாண்டி தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பது ஆபத்தாக மாறிவருகிறது.

இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். எனினும் அணை பாதுகாப்பு, தொடர் மழை எச்சரிக்கை காரணமாக் உபரி நீர் வெளியேற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேமசமயம் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து நீர் திறப்பு மதியம் 2 மணி முதல் குறையத் தொடங்கும் என மத்திய நீர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இப்போது கடந்த இரு தினங்களாக டெல்லியில் மழை இல்லையென்றாலும் கூட, ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் யமுனை ஆற்றின் கரையோர மக்களுக்கு பெரும் சிரமத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் ஏற்கெனவே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபுறமிருக்க, ஹரியானா மாநிலத்தின் கைதால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த ஜனநாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.ஏ) எம்.எல்.ஏ ஈஸ்வர் சிங்கை, பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெள்ள பாதிப்பை பார்வையிட வந்தபோது, இத்தனை காலம் வாராதது ஏன் என எம்.எல்.ஏ ஈஸ்வர் சிங்கிடம் கேள்வி எழுப்பிய பெண், `ஏன் இப்போது வந்தீர்கள்?’ என கூட்டத்தில் இருந்த ஒரு பெண் அறைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வர் சிங், “அந்த பெண்ணுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கமாட்டேன். அவரை நான் மன்னித்துவிட்டேன்” என்று கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.